இம்ரான் கான் பெண் எம்.பி.க்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக பரபரப்பு புகார்…!
பாகிஸ்தானில் உள்ள பிரதான எதிர்க்கட்சியான தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியின் தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மீது அவரது சொந்தக் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஒருவர், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடியின பகுதியைச் சேர்ந்த ஆயிஷா குலாலாய் எம்.பி., இச்சம்பவத்தால் இம்ரான் கான் கட்சியில் இருந்து விலகியதோடு அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கட்சியில் பெண்களை மிகவும் மோசமாக நடத்தியதாலேயே இம்ரான் கானின் கட்சியில் இருந்து விலகினேன். இம்ரான் கான் கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை அளித்து வருகிறார். வேறு சில உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற செய்திகளை அனுப்பியிருக்கிறார். தற்போது அவரது தொல்லை பொறுக்க முடியாததாலேயே கட்சியிலிருந்து வெளியேறி உள்ளேன். தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. இம்ரான் கானின் நடவடிக்கையை எந்த பெண்ணாலும் சகித்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ள ஆயிஷா, நவாஸ் ஷெரீப் கட்சியில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆயிஷாவின் இந்த குற்றச்சாட்டுக்களை இம்ரான் கான் கட்சியினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர் ராஜா பஷாரத் என்ற வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், குலாலாய் எம்.பி. இம்ரான் கான் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மோசமானது. எனவே அவரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.