வாஷிங்டன் சுந்தரின் அற்புதமான ஆல்-ரவுண்டர் ஆட்டத்தால் தூத்துக்குடி அணி வெற்றி…!
தமிழ்நாடு ப்ரீமியர்லீக் தொடரின் (TNPL) ஒன்பதாவது ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. காரைக்குடி காளை அணியும் ஆல்பர்ட் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் மோதிய பரபரப்பான இந்த ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்துக் கைகொடுக்க தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது. நிதானமாக சேஸிங் செய்து போராடி இறுதியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி அணி காரைக்குடி அணியின் போராட்டத்தை வீணாக்கியது.
TNPL
டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கிய காரைக்குடி அணி தூத்துக்குடி அணியின் துல்லியமான பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங்கால் தடுமாற்றதோடு ஆடியது. காரைக்குடி அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக காரைக்குடியின் தொடக்க ஆட்டக்காரர் அனிருதா பல பந்துகளை தொடக்கத்தில் வீணடித்தார். இரண்டாவது ஓவரை வீச வந்த அதிசயராஜ் காரைக்குடி அணியின் அனிருதாவை வெளியேற்றினார். பந்து பேட்டில் படாமலேயே கீப்பரின் கைகளில் சென்றது ரீப்ளேயில் தெரிய ஏமாற்றத்தோடு வெளியேறினார் அனிருதா. மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அனுபவ பத்ரிநாத் லட்சுமண் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வைத்யாவை அவுட்டாக்கி அந்த மகிழ்ச்சியை காலி செய்தார் வாஷிங்டன் சுந்தர். 3வது பந்தில் வைத்யாவை காலி செய்த வாஷிங்டன் சுந்தர் 5வது பந்தில் பத்ரிநாத்தை வெளியேற்றி இரட்டை அடி கொடுத்தார். விக்கெட் சரிவால் தடுமாறிய காரைக்குடி அணி 5 ஓவர்களுக்கு மூன்று விக்கெட் இழந்து 24 ரன்கள் எடுத்திருந்தது.
துல்லியமான பந்துவீச்சால் காரைக்குடி அணியை அடக்கி ரன்கள் எடுக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர் தூத்துக்குடி அணி பவுலர்கள். அடிமேல் அடியாய் ஆறாவது ஓவரை வீசிய அதிசயராஜ் தன் பங்கிற்கு ஸ்ரீனிவாசனை காலி செய்தார். துரதிர்ஷ்டவசமாக கடைசி பந்தில் கணபதி ரன் அவுட்டாக, காரைக்குடி அணியின் பேட்டிங் படுத்தே விட்டது. மேலும் தங்களது திறமையான பவுலிங் அட்டாக்கை வைத்து காளையை சோதித்தனர் தூத்துக்குடி பவுலர்கள். துல்லியமான ரன் அவுட்கள் மூலம் ஃபீல்டிங்கிலும் கெத்து காட்டினர் தூத்துக்குடி வீரர்கள். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷாஜகான் மட்டும் பவுண்டரிகள் அடித்து ஆறுதல்படுத்தினார். அதிசயராஜின் எட்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஆசிக் ஸ்ரீனிவாசின் பத்தாவது ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் என ஷாஜகான் அதிரடி காட்ட காரைக்குடி அணி 48 ரன்களை எட்டியது. சுவாமிநாதனுடன் நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக்கிய ஷாஜகான் 11 வது ஓவரிலும் சிக்ஸர் அடிக்க தன் பங்கிற்கு சுவாமிநாதனும் ஒரு பவுண்டரி விரட்டினார்.
TNPL
13 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார் 14 வது ஓவரை வீசிய ஆசிக் ஸ்ரீனிவாஸ். அடுத்தடுத்த பந்துகளில் சுவாமிநாதனும் அவருக்கு அடுத்து களம் கண்ட ராஜ்குமாரும் வெளியேற மீண்டும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது காரைக்குடி அணி. இருந்தாலும் மனம் தளராது போராடிய ஷாஜகான் 14 மற்றும் 15 வது ஓவரில் இரண்டு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்து 43 ரன்கள் திரட்டி கவுசிக் காந்தியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பிறகு ஆட்டம் களையற்றுப்போனது.இறுதியில் காரைக்குடி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஷாஜகான் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். தூத்துக்குடி அணி சார்பில் அதிசயராஜ், வாஷிங்டன் சுந்தர், ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பிறகு சுலபமான இலக்கை துரத்திய தூத்துக்குடி அணிக்கு வாஷிங்டன் சுந்தர் முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து நல்ல தொடக்கம் தந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கவுசிக் காந்தி சுனில் சாமின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அவரின் அடுத்த பந்திலேயே போல்டானார். அடுத்த களமிறங்கிய சுஷில் வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர, காரைக்குடி அணிக்கு தொடர்ந்து பவுண்டரிகள் கிடைத்தன. இருவரும் ஸ்டிரைக் ரொட்டேட் செய்து நேர்த்தியாக விளையாடினர். 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்களை எடுத்தது தூத்துக்குடி அணி.மோகன் ப்ரசாத்தின் ஆறாவது ஓவரில் சுஷில் ஸ்டம்பிட் முறையில் ஆட்டமிழக்க காரைக்குடி அணியின் நம்பிக்கை பெருகியது.
TNPL
அருமையான பந்துவீச்சு மற்றும் நேர்த்தியான ஃபீல்டிங்கால் தூத்துக்குடி அணிக்கு நெருக்கடி கொடுத்தனர் காரைக்குடி அணி வீரர்கள். வாஷிங்டன் சுந்தர் 10வது ஓவரில் ஒரு பவுண்டரி அடிக்க இரண்டு ஓவர்கள் கழித்து தன் பங்காக ஒரு சிக்ஸ் அடித்தார் நாதன். அதே ஓவரில் மீண்டும் நாதன் ரன் அவுட்டாக மீண்டும் தூத்துக்குடி அணியின் ஆட்டம் , ஆட்டம் கண்டது.சில ஓவர்கள் வெறுமையாக கடக்க ,அடுத்த வந்த ஆனந்தும் தடுமாறினார். 16 வது ஓவரில் அணியின் ஸ்கோர் 96 ரன்களாக இருந்த நிலையில் அவரும் சுரேஷ்பாபுவின் பந்துவீச்சில் கிளீன்போல்டானார். சீராக ஸ்கோர் நகர, மறுமுனையில் மனம் தளராது போராடிய வாஷிங்டன் சுந்தர் 18 வது ஓவரில் அரைசதமடித்து நம்பிக்கையளித்தார். 2 ஓவருக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பரபரப்பான 19 வது ஓவரை வீச வந்தார் கணபதி.
முதல் பந்தில் ஆகாஷ் சும்ரா சிக்ஸர் அடித்து மகிழ்ச்சியளித்தார். நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளை லெக் சைடில் சிக்ஸருக்கு பறக்கவிட்ட வாஷிங்டன் சுந்தர் ஸ்டைலாக ஆட்டத்தை முடித்துவைத்தார். இறுதிவரை பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் தூத்துக்குடி அணி நிர்ணயிக்கப்பட்ட 122 ரன்களை சேஸ் செய்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 47 பந்துகளில் 62 ரன்கள் விளாசினர். ஆல்ரவுண்டராக ஜொலித்த வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.