சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!
வாஷிங்டன்: ”வடகொரியா, ஆபத்தான வகையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளார்.கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, வடகொரியா, கடந்த ஒரு மாதத்தில், இரண்டாவது முறையாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் பயங்கர ஏவுகணை சோதனையை, நேற்று முன்தினம் நடத்தியது.ரஷ்யா, ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக, புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க, அமெரிக்க பார்லிமென்ட், சமீபத்தில் ஒப்புதல் அளித்ததற்கு மறுநாள், இந்த சோதனையை, வடகொரியா நிகழ்த்தி உள்ளது.இது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:கடந்த ஒரு மாதத்தில், இரண்டாவது முறையாக, ஏவுகணை சோதனையை, வடகொரியா நடத்தியுள்ளது. கிழக்காசிய பிராந்தியத்தில், பிற நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா நடந்துள்ள விதம், கடும் கண்டனத்துக்கு உரியது.வடகொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த சோதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. உண்மையில், வடகொரியாவின் எதிர்பார்ப்புக்கு மாறான விளைவுகள் நிகழும். உலகை அச்சுறுத்தும் வகையிலான இந்த சோதனைகளால், வடகொரியா, மேலும் தனிமைப்படுத்தப்படும்; அதன் பொருளாதாரம் வலுவிழக்கும். இதனால், வடகொரிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வடகொரியா நிகழ்த்தியுள்ள, கண்டம் விட்டு கண்டம் பாயும், அதிசக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை, அமெரிக்காவின் பெரும் நிலப்பரப்புகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி உள்ளது. வடகொரியா, நேற்று முன்தினம் சோதனை செய்த ஏவுகணை, அமெரிக்காவின் முக்கிய நகரங்களான, லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ உள்ளிட்டவற்றை தாக்க வல்லது.இது குறித்து, கொரியா செய்தி ஏஜன்சி கூறுகையில், வடகொரியா ஏவிய ஏவுகணை, 3,725 கி.மீ., உயரத்தில், 998 கி.மீ., துாரம் சென்று, ஜப்பான் கடல் பகுதியில் துல்லியமாக தாக்கியது. இந்த சோதனை, வடகொரியாவின் ஏவுகணை பலம், தொலைதுாரம் வரை அணு ஆயுதங்களை எடுத்து சென்று தாக்கக் கூடியது என்பதை நிரூபணமாக்கி உள்ளது’ என, தெரிவித்துள்ளது.