போலீசார் வீட்டில் தங்களது கைவரிசையை காட்டிய டெல்லி பல்கலை. மாணவர்கள்
புதுடெல்லி: இரண்டு போலீஸ் அதிகாரிகள் வீட்டில் திருடு போன சம்பவத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் இரண்டு மாணவர்கள் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சானக்கியபுரியில் வசிக்கும் போலீஸ் அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு தங்க நகை, லேப்டாப், மொபைல் போன் என லட்சக்கணக்கான மதிப்பு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. ஊரில் இருந்து திரும்பிய போலீஸ் அதிகாரிகள், வீட்டில் கொள்ளை நடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்ததை அடுத்து, கொள்ளையர்களுக்கு போலீசார் வலை வீசி வந்தனர். அதில், ராகுல் சர்மா(19) என்பவர் மீது போலீசின் சந்தேகம் படிந்தது. அவர் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த சர்மா, டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவராக உள்ளார். ஒரு கட்டத்தில் சர்மாவை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அதிகாரிகள் வீட்டில் கொள்ளை அடித்ததை சர்மா ஒப்புக் கொண்டுள்ளார். அவருடன் படிக்கும் மற்றொரு மாணவர் ஷ்ரவண் குமார் பார்தி மற்றும் டிரைவர் யோகேஷ் வர்மா ஆகியோர் சேர்ந்து கொள்ளையடித்ததாக அவர் போலீசில் தகவல் அளித்தார். அதைத் தொடர்ந்து மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்ெகாண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.