இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராக ஜாகிர்கான் கிடையாது : பிசிசிஐ விளக்கம்
மும்பை: இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜாகீர்கான் முழுநேர பயிற்சியாளர் அல்ல என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. கேப்டன் கோலியுடனான மோதலால் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ளே ராஜினாமா செய்தார். இதையடுத்து பலத்த போட்டிக்கிடையே இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். மேலும் டிராவிட் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஜாகீர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜாகீர்கான் முழுநேர பயிற்சியாளர் அல்ல என்று பிசிசிஐ .கூறியுள்ளது. வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டிராவிட்டின் நியமனம் போன்றதே ஜாகீர்கான் நியமனமும் என்றும் பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அணியின் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதில் தாமாக முன்வந்து கிரிக்கெட் வாரியத்துக்கு உதவிய சச்சின், கங்குலி மற்றும் விவிஎஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்காக கிரிக்கெட் ஆலோசனைக் குழு எந்தவிதமான ஊதியமும் பெறவில்லை என்றும் பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது.
மேலும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவரின் ஆலோசனையின் பேரிலேயே இந்திய அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது டிராவிட் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஜாகீர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக, பயிற்சியாளர் குறித்து அறிவித்த பிசிசிஐ, ஜாகீர்கானை முழுநேர பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயல்படுவார் என்றே தெரிவித்திருந்தது. இதேபோல் இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பரத் அருணை நியமிக்க ரவி சாஸ்திரி அடம்பிடிப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.