அபார பந்துவீச்சால் வங்கதேசத்தை வீழ்த்தி முன்னிலைப் பெற்றது தென் ஆப்பிரிக்கா…!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று அசத்தியது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்டிரோமில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 146 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 496 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அந்த அணியில் டீன் எல்கர் 199 ஓட்டங்கள், ஆம்லா 137 ஓட்டங்கள் எடுத்தனர்.
பின்னர் ஆடிய வங்கதேச அணி 89.1 ஓவர்களில் 320 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் மோமினுல் ஹக் 77 ஓட்டங்கள், மகமதுல்லா 66 ஓட்டங்கள் சேர்த்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும், மோர்கல், ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸில் 176 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 56 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 81 ஓட்டங்கள், டெம்பா பெளமா 71 ஓட்டங்கள் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் மோமினுல் ஹக் 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபிஜுர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 423 ஓட்டங்கள் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்கதேசம் ஒன்றரை மணி நேரத்துக்குள் எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் 41 ஓட்டங்களுக்கு இழந்ததால் அந்த அணி 32.4 ஓவர்களில் 90 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
டீன் எல்கர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.
இரண்டாவது டெஸ்ட் வரும் வெள்ளிக்கிழமை புளோயம்ஃபான்டீனில் தொடங்குகிறது.