ஐரோப்பிய ஹாக்கி தொடரைக் கைப்பற்றியது இந்தியா ஹாக்கி அணி ….
ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது இந்திய அணி. முதலில் பெல்ஜியத்துடன் இரு ஆட்டங்களில் விளையாடியது. அதைத் தொடர்ந்து நெதர்லாந்துக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இதில் முதல் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்ட இந்திய அணி, திங்கள்கிழமை நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதன்மூலம் நெதர்லாந்துக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வெற்றி குறித்து இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் பேசியது: ‘இந்திய வீரர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். அதனாலேயே இந்தியாவால் நெதர்லாந்தை வீழ்த்த முடிந்தது.
நெதர்லாந்து அணி மிகுந்த அனுபவம் வாய்ந்த அணி. அதில் இடம்பெற்றுள்ள 8 வீரர்கள் 100-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அதனால் அவர்களை வீழ்த்துவதற்கு சரியான திட்டங்களோடு களமிறங்கினோம்.
இந்திய அணியில் சிலர் அறிமுகப் போட்டியில் ஆடினார்கள். எனினும் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் வீரர்கள் யாரும் பதற்றப்படவில்லை. அதேநேரத்தில் மிகுந்த நம்பிக்கையோடு ஆடினார்கள்’ என்று கூறினார்.