அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்
பெரம்பலூர்:பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா, அதிக மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வின் காரணமாக மருத்துவம் படிக்க முடியாமல் போனது.
உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும் தன்னால் மருத்துவம் படிக்க முடியவில்லை என்று மனமுடைந்த அனிதா, நேற்று தூக்குப்போட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார்.
ஒருவருட விலக்கு தரப்படும் என்று சொன்ன மத்திய அரசு அமைச்சர், தமிழக அரசு அமைச்சர்கள் கடையில் கைவிரித்ததும் அனிதாவின் தற்கொலைக்கு மிகப்பெரிய காரணம்.
இதையடுத்து அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பெரம்பலூர் காமராஜர் வளைவுப் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.பி.மனோகரன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில், கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்! அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கிறோம்! என்று முழக்கங்களை எழுப்பினர்.
இந்த மறியலில், மாநிலப் பொறுப்பாளர்கள் வீர.செங்கோலன், வழக்கறிஞர்கள் சீனிவாசராவ், பி.காமராஜ், நகரப் பொறுப்பாளர் சண்முகசுந்தரம், செய்தித் தொடர்பாளர் உதயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் காவலாளர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனையேற்று மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.