குழந்தைகள் விளையாட்டு வீரர் ஆகவேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்களிடம் அதிகரித்துள்ளது -ஒலிம்பிக் நாயகி சிந்து மகிழ்ச்சி.

Default Image

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவாக வேண்டும் என்று எண்ணம் மாறி விளையாட்டு வீரராக உருவாக வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறினார்.
மிஷன் ஸ்போர்ட்ஸ் எனும் தனியார் விளையாட்டுக் கல்வி நிறுவனம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் விளம்பரத் தூதராக பி.வி.சிந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த நிறுவனத்தின் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற பி.வி.சிந்து, செய்தியாளர்களிடம், “கடந்த காலங்களில் இந்தியப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவாக வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்காக அவர்களைத் தயார்படுத்தி வந்தனர்.
ஆனால், அந்தநிலை தற்போது மாறியுள்ளது. பல குடும்பங்களில் தங்களது குழந்தைகள் விளையாட்டு வீரராகவோ, வீராங்கனையாகவோ உருவாக வேண்டும் என்று நினைத்து, அவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க மாற்றம்.

வரும் காலங்களில், மக்களின் மன மாற்றம் மேலும் விரிவாகும் என்று நம்புகிறேன். விளையாட்டு தனிப்பட்ட விதத்தில் ஒருவரது உடல், மன நிலையைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ஒரு குழந்தை சாம்பியனாகவே பிறப்பதில்லை. விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதற்கு முதலில் அவர்களுக்கு ஆர்வம் வேண்டும்.
பின்னர், பெற்றோர்களின் ஒத்துழைப்பும், நல்ல பயிற்சியாளரும் தேவை. எனக்கு கோபிசந்த் கிடைத்திருப்பதைப்போல எல்லாக் குழந்தைகளுக்கும் சிறந்த பயிற்சியாளர் கிடைப்பது சாத்தியமில்லை. இருப்பினும் பல ஆண்டுகள் கடின உழைப்பும், தொடர் பயிற்சியும் ஒருவரை சாம்பியனாக உருவாக்கும்.
இந்தியாவில் தற்போது பல்வேறு விளையாட்டுகளுக்கு பிரீமியர் லீக் நடத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. இதன் மூலமாக உடன் விளையாடும் வெளிநாட்டு வீரர்களிடம் இருந்து உள்ளூர் இளம் வீரர்கள் பல விஷயங்களை, நுட்பங்களைக் கற்றுக் கொள்கின்றனர்.
இந்தியாவில் ஒரு விளையாட்டில் ஓரிரு சர்வதேச வீரர்கள் மட்டுமே இருந்த நிலை மாறி, தற்போது பல வீரர், வீராங்கனைகள் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
பத்மபூஷண் விருதுக்காக விளையாட்டுத் துறை அமைச்சகம் எனது பெயரை பரிந்துரைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, தூய்மை ஆந்திரம் திட்டத்தின் தூதுவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன். இவற்றின் மூலமாக எனக்கான பொறுப்புணர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்