கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!முன்னால் அமைச்சர் நேரு சகோதரர் ராமஜெயம் வழக்கு….
ராமஜெயம் கொலை வழக்கில் 5 ஆண்டுக்கு பின்பும் சிபிசிஐடி விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், சிபிஐக்கு உடனடியாக மாற்றவும், 3 மாதத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர் 29.3.2012ல் கொலை செய்யப்பட்டார். இவரது சடலம் மார்ச் 29ம் தேதி கல்லணை செல்லும் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டு, கம்பிகளால் கட்டி காட்டில் வீசப்பட்டிருந்தது. இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அப்படி இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுகுறித்து ராமஜெயத்தின் மனைவி லதா, 2014 டிசம்பரில் ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘என் கணவர் ராமஜெயம் கொலை வழக்கில், எந்த முன்னேற்றம் இல்லாததால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவர்களும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. எனவே, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்,’’என கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடிக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த மனு கடைசியாக கடந்த ஏப்ரல் 27ல், நீதிபதி ஏ.எம்.பசீர்அகமது முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘சம்பவம் நடந்து 5 ஆண்டுகளாகிறது.இந்நிலையில் சென்னை சிபிஐ இணை இயக்குநர் உடனடியாக ஒரு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் விசாரணையை 3 மாதத்திற்குள் முடித்து விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு மற்றும் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்,’’ என உத்தரவிட்டார் .