போலி டோக்கன் முலம் மணல் திருட்டு..,
கரூர் மாவட்டம், காவிரியாற்று பகுதிகளில், 12 மணல் குவாரிகள் செயல்பட்ட நிலையில், தற்போது அரசின் சார்பில், மாயனூர், சிந்தலவாடி ஆகிய இடங்களில், கடந்த, சில நாட்களுக்கு முன், மணல் குவாரிகள் திறக்கப்பட்டன. முன்னதாக, அரசு நிர்ணயத்த தொகையை செலுத்தி, டோக்கன் பெற்று, லாரிகள் மூலம் மணல் ஏற்றிச் சென்றனர். அதில், ஆளும்கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் துணையோடு, மணல் மாபியாக்கள், போலி டோக்கன் வினியோகம் செய்து, மணல் கடத்திச் சென்றனர். இந்நிலையில், ஆன்லைனில் மணல் எடுக்கும் முறை அமலுக்கு வந்ததால், போலி பதிவெண் கொண்ட லாரி, டோக்கன் கொண்டு வரும் நபர்கள் மீது, போலீசார் நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி, கடந்த, 14ல் சிந்தலவாடி மணல் குவாரியில், போலி பதிவெண் கொண்ட லாரியை ஓட்டி வந்ததாக, கரூர் மாவட்டம், ஓந்தாகவுண்டனூர் டிரைவர் முனியப்பன், 43; போலி டோக்கன் கொண்டு வந்த, நாமக்கல் மாவட்டம், காவக்காரன்பட்டி டிரைவர் குமார், 23, ஆகியோர் மீது, குளித்தலை கனிமவளத்துறை உதவி பொறியாளர் முனியப்பன், லாலாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால், போலி டோக்கன் வழங்கியவர்களை போலீசார் கைது செய்யவில்லை. ஆன்லைன் முறை அமலுக்கு வந்ததால், ஆளும்கட்சி பிரமுகர்கள், சில அரசு அதிகாரிகள், மணல் மாபியாக்கள் முறைகேட்டில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.