பிக் பாஸ் கமலால்…. தமிழக அரசியலில் புதிய திருப்பம்
தமிழக அரசு பற்றி நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்திற்கு ஓ.பி.எஸ் அணி ஆதரவு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் பலர் கமல்ஹாசனை கண்டிக்கும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் கருத்து தெரிவித்து வந்தனர்.
அந்நிலையில், கமல்ஹாசனுக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதற்கு கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அணியும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த அணியை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ஜனநாயக நாட்டில் அரசை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. கமல்ஹாசனின் புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர அவரை குறை சொல்லவோ, பழிக்கவோ கூடாது. அப்படி செய்தால், அவர்களது தரம்தான் குறையும். விமர்சனத்திற்கு ஆட்சியாளர்கள் கோபப்படுவது, இயற்கை தர்மத்திற்கு எதிரானது” என அவர் கருத்து தெரிவித்தார்.
அதேபோல் இதுபற்றி கருத்து தெரிவித்த ஓ.பி.எஸ் “கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. எனவே, கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது” என கூறியுள்ளார்.