தனியார் பொறியியல் கல்லுாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!
சென்னை: இன்ஜினியரிங் படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்க்க, தனியார் கல்லுாரிகளை அனுமதிக்க கோரிய மனுவுக்கு, அரசிடம் விளக்கம் பெறும்படி, கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இன்ஜினியரிங் படிப்பில், மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை ரத்து செய்து, மொத்த இடங்களையும் நிரப்பிக் கொள்ள அனுமதிக்கும்படி, திருநெல்வேலி மாவட்டத்தில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லுாரிகள் நிர்வாக சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில், கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணத்தில், மாணவர்களை சேர்க்க அனுமதிக்கும்படி, மனுவில் திருத்தம் செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தது. திருத்தப்பட்ட மனுவுக்கு, அரசிடம் விளக்கம் பெறும்படி, கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 26ம் தேதிக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.இதற்கிடையில், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள், பல்வேறு வகுப்புகளில் சேர, கவுன்சிலிங் வழி வகுக்கிறது. மேலும், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இடஒதுக்கீட்டு முறையை, கவுன்சிலிங் உறுதி செய்கிறது.குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி என்ற முறையில், கல்வி கட்டணத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. வெளிப்படைத்தன்மையை, கவுன்சிலிங் உறுதி செய்கிறது.
இடங்களை பகிர்ந்து கொள்ள, தனியார் கல்லுாரிகள் ஒப்புக் கொண்டு, அரசுக்கு கடிதங்கள் அளித்துள்ளன. மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங், துவங்கி விட்டது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.