ப்ளேபாய் நிறுவனர் மறைவு…நாயகன் படத்தின் மறக்க முடியாத வசனம் “நீங்க நல்லவரா? கெட்டவரா?”
நேற்றைய தினம் ப்ளேபாய் பத்திரிக்கை நிறுவனர் ஹியூக் ஹெப்னர் தனது 91 வது வயதில் மறைந்துள்ளார்.
1950களில் பத்திரிக்கை துறையில் நுழைந்த காலத்தில் அமெரிக்க சமுதாயமும் பெண்கள் விஷயத்தில் மிகுந்த கட்டுபாடுகளை கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் முழு நிர்வாணப்படங்களை வெளியிட்டு அமெரிக்க சமுதாயத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியவர்.
வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக போராடிய சாதாரண மக்களின் வலுவான குரலாக ப்ளேபாய் இருந்தது.
“டைம்” போன்ற முன்னணி பத்திரிக்கைகள் வியட்நாம் போரை ஆதரித்தது. எதிர்த்தவர்களின் குரலாக ப்ளேபாய் இருந்தது(அதற்காக ஆர்தர் கிரட்சேமர் என்ற துணை ஆசிரியரை நியமித்தார்) .
அமெரிக்காவின் வெற்றி பற்றி முன்னணி பத்திரிக்கைள் கதையளக்க, “ப்ளேபாய்” பத்திரிக்கையில் ஏராளமான அமெரிக்க இராணுவ வீரர்கள், யுத்தகளத்திலிருந்து வியட்நாம் யுத்தத்தின் உண்மை நிலையை எழுதினார்.
அதே போன்று பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ளும் உரிமை உண்டு என்பதற்கு சிகாகோ பெண்கள் விடுதலை அமைப்பின் குரலுக்கு ஆதரவு தெரிவித்தார் தனது பத்திரிக்கையின் மூலமாக.
ப்ளேபாய் பவுண்டேஷன் அமைத்து சிவில் உரிமை போராட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கத் தொடங்கினார்.
இந்தப் பவுன்டேஷன் ப்ளேபாய் பத்திரிக்கைக்கு அப்பாற்பட்டு ‘ஒரு நியாயமான சமூகம் அமைய உதவி செய்யப்படும்‘ என்றார். சிவில் உரிமை வழக்குகளுக்கு நிதி உதவி அளித்தார்.
ஆப்பரிக்க-அமெரிக்க மக்களின் சுதந்திரத்திற்கு ப்ளேபாய் பத்திரிக்கை மிகுந்த முக்கியத்துவம் வழங்கியது. மார்ட்டின் லூதர் கிங் அளித்த பேட்டிகளிலேயே மிகவும் நீளமான பேட்டி ப்ளேபாய் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டி.
அந்த பேட்டிக்கு பிறகுதான் கிங் 25000 அமெரிக்கர்களை திரட்டி 54 மைல் தூரம் “மாண்ட்கோமரி”யை நோக்கிய வரலாற்று சிறப்பு மிக்க நடைபயணத்தை நடத்தினார்.
கிங் கொல்லப்பட்ட ஏப்ரல் 4 1968 தனது வாழ்நாளில் மறக்க முடியாத துக்க தினம் என்று ஹெப்னர் பதிவிட்டுள்ளார்.
2015ல் ப்ளேபாய் பத்திரிக்கையில் நிர்வாணப்படங்களை பதிவிடுவதில்லை என்று முடிவெடுத்தார். பின்னர் தனது மகனிடம் பத்திரிக்கை நிர்வாகத்தை அளித்தார்.
விமர்சனங்கள் உண்டு. ஆனால், அமெரிக்க சமூகத்தில் பத்திரிக்கையின் மூலம் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியவர் என்பதை மறுப்பதற்கில்லை.