தூத்துக்குடி செல்போன் கடையில் விற்பனை : காவல்துறையின் ரேடியோ ரிசீவர்கள் வாக்கி டாக்கிகள் பறிமுதல்
தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் காவல்துறையினர் பயன்படுத்தும் ரேடியோ வயர்லெஸ் ரிசீவர்கள், வாக்கி டாக்கி உள்ளிட்ட கருவிகளை விற்பனை செய்த 3 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 77 வயர்லெஸ் கருவிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு செல்போன் கடையில் ேபாலீசார் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த போலீசார் பயன்படுத்தும் ரேடியோ, வயர்லெஸ் ரிசீவர்கள், வாக்கி டாக்கிகள் ேபான்ற 57 வயர்லெஸ் கருவிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடை உரிமையாளர் ஷேக் மீரான் (35), உறவினர் காஜாமுகைதீன் (42) ஊழியர் தாஜூதீன் (27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடையின் மற்றொரு உரிமையாளரான சாகுல் என்பவரது வீட்டில் ஒரு மூட்டையில் வைக்கப்பட்டிருந்த 20 வயர்லெஸ் கருவிகளையும் போலீசார் கைப்பற்றினர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் கூறுகையில், ”இந்தவகை கருவிகள் தற்போது பெரிய கட்டிடங்கள் கட்டுமான பணிகள், கப்பல்கள், ஷிப்பிங் நிறுவனங்கள், விசைப்படகுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை விற்பதற்கு உரிய அனுமதி பெறவேண்டும். உரிமம் இல்லாததால் கைது செய்யப்பட்டு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவை யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.