அதிக அளவில் முகநூல் பயன்பாட்டாளர்கள் : உலக அளவில் இந்தியாவிற்கு முதலிடம்!!!
உலக அளவில் அதிக முகநூல் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஏறத்தாழ 24.1 கோடி பேர் இந்தியாவில் முகநூலைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அமெரிக்காவே முகநூல் பயன்பாட்டில் முன்னிலையில் இருந்து வந்தது. தற்போது அந்நாட்டை பின்னுக்குத் தள்ளி இந்தியா அந்த இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொருத்தவரை சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகவேகமாக அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறையினர் மட்டுமன்றி அனைத்து வயதினரும் முகநூல், வாட்ஸ்-அப் போன்ற செயலிகளை தீவிரமாகப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முகநூல் வலைதளத்தைப் பொருத்தவரை அதன் பயன்பாட்டாளர்களின் விவரங்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாவது உண்டு. அதன்படி, கடந்த 13-ஆம் தேதி வரையிலான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உலக அளவில் அதிக முகநூல் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மொத்தம் 24.1 கோடி பேர் அந்நாட்டில் முகநூலைப் பயன்படுத்துகின்றனர். அதேநேரத்தில் அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை 24 கோடியாக உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் முகநூல் பயன்பாட்டார்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் அந்த காலக்கட்டத்தில் 2.6 கோடி பேரே புதிதாக முகநூலில் இணைந்துள்ளனர்.
சமூக வலைதளப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வந்தாலும், அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையின்படி கணக்கிட்டால் அது மிகக் குறைந்த அளவுதான். அதாவது, இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேர் மட்டுமே முகநூலைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.