குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: கோபால்கிருஷ்ண காந்தி கட்சிகளுக்கு வேண்டுகோள்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் அரசியல் கட்சிகள் வேறுபாடின்றி தன்னை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ள கோபால்கிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட் பாளராக கோபால்கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில், பல்வேறு கட்சிகளிட மும் தனக்கு ஆதரவு கோரி கோபால் கிருஷ்ண காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரசியல் ரீதியாக பல்வேறு பார்வை இருந்தாலும், என்னை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் எந்த கட்சியையும் சாரா மல் இருக்கிறேன். எனவே மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பாபாசாகேப் அம்பேத்கர், மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், பெருந் தலைவர் காமராஜ், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை களை நம்பும் அனைவரும் கட்சி வேறுபாடின்றி என்னை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
என்னை வேட்பாளராக முன் மொழிந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளேன். மேலும் அதிமுக வின் ஆதரவு கேட்டு தமிழக முதல் வருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். அதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கடிதம் எழுதியுள்ளேன். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தபோது எம்.ஜி. ஆருக்கு கீழ் பணிபுரிந்ததை நினைவுகூர்கிறேன். ஜெயலலிதா வுடன் உரையாடியதும் நினைவில் உள்ளது. அன்புமணி ராமதாஸும் ஆதரவு அளிப்பதாக தொலைபேசி யில் உறுதியளித்துள்ளார்.
ஒருவேளை குடியரசுத் துணைத் தலைவராக நான் தேர்வு செய்யப் பட்டால் குடிமக்களின் நம்பிக்கை, பிரச்சினைகள், அச்சங்கள் ஆகிய வற்றை பிரதிபலிப்பேன். அதேவேளை யில் இந்தியாவின் சட்டப்பேரவைகள், நீதித்துறை, சுதந்திரமான கருத்து பரிமாற்றம் ஆகியவற்றின் மீது நம்பிக்கையோடு இருப்பேன்.
இவ்வாறு கோபால்கிருஷ்ண காந்தி கூறியுள்ளார்.