பேட்டிங்க், பௌலிங்கில் அசத்திய ஆஸ்திரேலிய வீரர்களை அடிச்சிக்க ஆளே இல்ல – கோலி பாராட்டு.
பேட்டிங்க், பௌலிங்கில் அசத்திய ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள்தான் என்று இந்திய அணி கேப்டன் விராத் கோலி பாராட்டியுள்ளார்.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
இதில், முதல் மூன்று போட்டிகளில் வென்று, தொடரை கைப்பற்றிய இந்திய அணி, பெங்களூருவில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் முதலில் ‘பேட்டிங்’ செய்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 124 ஓட்டங்கள், ஆரோன் பின்ச் 94 ஓட்டங்கள் எடுத்து 50 ஓவரில் 334 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய இந்திய அணி ரோகித் சர்மா 65 ஓட்டங்கள், ரகானே 53 ஓட்டங்கள் எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 41 ஓட்டங்கள், கேதர் ஜாதவ் 67 ஓட்டங்கள் எடுத்தனர்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தின் அபார பந்துவீச்சால் இந்திய அணியை வீழ்த்தியது.
தோல்விக்குப் பிறகு இந்திய கேப்டன் கோலி, “நான்காவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது ஏமாற்றம். ‘பேட்டிங்கில்’ ஆஸ்திரேலிய அணி, முதல் 30 ஓவர்கள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது. அப்போது 350 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த வேண்டும் என முடிவு செய்தோம்.
இதற்கேற்ப பவுலர்கள் சிறப்பாக செயல்பட, 334 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் ‘சேஸ்’ செய்ய களமிறங்கினோம்.
ரோகித், ரகானே ஜோடி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. ஆனால், அதன்பின் வந்தவர்கள் வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்கத்தவறியதால், தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. இதற்காக இந்தியாவின் ‘பேட்டிங்’ மோசம் என்று கூறவில்லை.
மாறாக, அன்றைய தினம் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமைந்தது. பேட்டிங், பௌலிங்கில் அசத்திய ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள்தான்” என்று கோலி கூறினார்.