விம்பிள்டன் இறுதி போட்டியில் வெல்லப்போவது யார்? வீனஸா? முகுருஜாவா?
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் கார்பின் முகுருஜா இன்று மோதுகின்றனர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 11-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சும், தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவும் இன்று களம் காணுகின்றனர்.
ஏற்கனவே ஐந்து முறை விம்பிள்டனை வென்று இருக்கும் 37 வயதான வீனஸ் வில்லியம்ஸ், இந்த முறையும் மகுடம் சூடினால் ‘ஓபன் எரா’ வரலாற்றில் அதிக வயதில் ‘கிராண்ட்ஸ்லாம்’ வென்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
அதே சமயம் 2015-ஆம் ஆண்டில் இறுதி ஆட்டத்தில் தோற்றிருந்த 23 வயதான முகுருஜா முதல் முறையாக விம்பிள்டனை வெல்வதில் தீவிர முனைப்புடன் உள்ளார்.
வீனஸும், முகுருஜாவும் இதுவரை நான்கு ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அதில் 3-ல் வீனஸ் வெற்றி கண்டிருக்கிறார்.
வாகை சூடும் வீராங்கனைக்கு ரூ.18½ கோடி பரிசுத் தொகை என்பது கொசுறு தகவல்.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும்.