செல்லாக் காசு என்றொரு மெகா மோசடி
இந்திய மக்களுக்கு செய்யப்பட்ட மிகப்பெரியநிதி மோசடி, சென்ற நவம்பர் 8ஆம் தேதி பிரதமர்நரேந்திர மோடி திடீரென அறிவித்து, அன்று நள்ளிரவிலிருந்தே நடைமுறைக்கு வந்த உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவையாக்கப்பட்ட நடவடிக்கை. அதனால் பொருளாதாரம் பலமடைந்துவிட்டது என்பதாக பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பெட்ரோல் நிலையங்கள் என எங்கெங்கும் பிரதமரின் படத்தோடுவிளம்பரப்படுத்தப்பட்டது. முந்தைய காங்கிரஸ்அரசு பத்தாண்டுகாலத்தில் விளம்பரங்களுக்காகச் செய்ததைவிட கிட்டத்தட்ட இருமடங்கு செலவை (ரூ.3,214.7கோடி) கடந்தமூன்றே ஆண்டுகளில் மோடிஅரசு செய்திருப்பதை மத்திய விளம்பரஇயக்குநரகத் தகவல் தெரிவிக்கிறது.
சராசரியாக ஒரு நாளுக்கு 3.21 கோடி ரூபாய்செலவிடப்பட்ட அந்த விளம்பரங்களில்கணிசமானவை இந்த செல்லாக்காசு தாக்குதலை நியாயப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டவைதான்.பிரதமரின் அறிவிப்பும் விளம்பரங்களும் போலியானவை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை வெளிப்படுத்துகிறது.ஆகஸ்ட் 30இல் வெளியிடப்பட்ட அந்தஅறிக்கை, செல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட ரூ.15,44,000 கோடி மதிப்புள்ள ரூ.1,000ரூ.500 ரூபாய் நோட்டுகளில் 98.96 விழுக்காடுவரையில் தன்னிடம் வந்துவிட்டன என்று அந்தஅறிக்கை கூறுகிறது.இந்த நடவடிக்கையால், கறுப்புப் பணம் வைத்திருப்போர் தங்கள் ரொக்கத்தை மாற்ற முடியாமல் போகும், இதனால் ரூ.5 லட்சம் கோடி வரையில் அரசுக்கு ஆதாயமாகும், அது சமூகநலத் திட்டங்களுக்குச் செலவிடப்படும் என்று சொல்லப்பட்டது.
மாறாக, கறுப்புப் பணமாகப் பதுங்கியவை உள்பட அனைத்து செல்லாதபணத்தாள்களும் வங்கிக்கு வந்துவிட்டன என்றால், அந்த 5 லட்சம் கோடிக்கும் இந்த நடவடிக்கையைப் பயன்படுத்தி வெள்ளையடிக்கப்பட்டுவிட்டன என்பதே இதன் பொருள்.கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளநோட்டு தடுப்பு, பயங்கரவாதிகளுக்குச் செல்லும் பணம் மறிப்பு என்றெல்லாம் சொல்லப்பட்ட பலன்களில் ஒன்றுமே நிறைவேறவில்லை.
ரொக்கமில்லா சமூகத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்று பின்னர் புதிய காரணத்தைச் சொன்னார்கள். மக்களிடம் அன்றாடம் புழங்கிக்கொண்டிருந்த ரொக்கம் மொத்தமும் வங்கிகள்மூலம் கைப்பற்றப்பட்டு கார்ப்பரேட் அதிபதிகளுக்குத் தாரை வார்ப்பதற்கான நிதி திரட்டப்பட்டுவிட்டது என்பதே உண்மை. இந்த மோசடியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் நாட்டின் பலபகுதிகளிலும் வங்கிவாசல்களில் காத்திருக்கையில் இறந்து போனார்கள். அவர்களது குடும்பங்களுக்கு ஒரு சிறு தொகை கூட இழப்பீடாகத் தரப்படவில்லை, ஒரு குற்ற வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தொடரும் பகட்டு விளம்பரங்களாலோ, மத்திய அமைச்சரவையில் சிலரை நீக்கி, சிலரைச் சேர்க்கிற குலுக்கல் வேலைகளாலோ மக்களின் கண்களில் இந்த செல்லாக்காசு நடவடிக்கை செல்லாமல்போய்விட்ட உண்மையை மறைத்துவிட முடியாது.