தயாரிப்பாளர் ஆகிறார் விஜய் சேதுபதி
கோகுல் இயக்கத்தில் உருவாகும் ‘ஜுங்கா’ படத்தை ரூ.20 கோடி பொருட்செலவில் தயாரித்து நாயகனாக நடிக்கவுள்ளார்.’காஷ்மோரா’ படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பது உறுதியாகி முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டது.தற்போது ‘ஜுங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை சுமார் ரூ.20 கோடி பொருட்செலவில் தானே தயாரித்து, நடிக்க முடிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி.
‘ஜுங்கா’ குறித்து இயக்குநர் கோகுல் கூறியிருப்பதாவது:
‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார். அப்போது பொருத்தமான கதை உருவானவுடன் நானே வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ கதை தயாரானதும், சந்தித்து கதையைக் கூறினேன்.
முழுக்கதையையும் கேட்டுவிட்டு, சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு இதனை நானே தயாரிக்கிறேன் என்றார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏனெனில் படத்தின் பட்ஜெட் தோராயமாக இருபது கோடியைத் தாண்டும். அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் அதிக பொருட்செலவில் தயாராகும் படம். அதனால் வேறு தயாரிப்பாளரைக் காட்டிலும் நாமே தயாரிப்பது தான் பொருத்தமானது என்று கூறி அவரே தயாரிக்கிறார்.
60% படம் பிரான்சிலும், மீதமுள்ள படம் சென்னை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கத் திட்டமிட்டுள்ளோம். நாயகியாக சாயிஷா சைகல், முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஏனைய தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.இவ்வாறு கோகுல் தெரிவித்துள்ளார்.
‘ஜுங்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது