ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவதே… இந்த சமுகத்துக்கு நாம் செய்யும் மிகபெரிய தொண்டு:நடிகர் விஷால்
சென்னை: கல்வி கிடைக்க வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு உதவினால் அது அவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் அது நல்ல பலனளிக்கும் என நடிகர் விஷால் கூறினார்.
மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாம் நினைவு நாளையொட்டி ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் ஒன்றில் அப்துல் கலாமுக்கு நடிகர் விஷால் அக்குழந்தைகளுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதன் மூலம் அந்த குழந்தைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் வளர்கிறது. குழந்தைகளின் கையில் தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது என்று அப்துல் கலாம் சொன்னார். அக்குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க என்னுடைய டிரஸ்ட் வழியாக உதவி செய்து வருகிறேன்.
அனைவரும் அவர்களால் முடிந்த அளவுக்கு பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும். நாம் உதவி செய்வதைப் பார்த்தால் நம்மோடு சேர்ந்து மேலும் சிலர் கைகோர்க்கலாம். இது ஒரு சங்கிலித்தொடர் போல அடுத்தடுத்துத் தொடரும் என்று கூறினார்.