விவசாயிகள் மாநாடு பேரணியுடன் நிறைவு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில 29-வது மாநாடு பேரணி பொதுக்கூட்டத்துடன் செவ்வாயன்று கம்பத்தில் நிறைவு பெற்றது.மாநாட்டில் 88 பேர்கள் கொண்ட மாநிலக்குழு தேர்வுசெய்யப் பட்டது. மாநிலத்தலைவராக கே.பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளராக பெ.சண்முகம், பொருளாளராக கே.பி.பெருமாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத்தலைவர்களாக டி.ரவீந்திரன், கே.முகமதலி,வி.சுப்பிரமணி, ஜி.சுந்தரமூர்த்தி, ஆர்.செல்லசுவாமி, ஏ.நாகப்பன், ஏ.எம்.முனுசாமி, எஸ்.ஆர்.மதுசூதனன் ஆகியோரும் துணைச்செயலாளர்களாக ஏ.விஜயமுருகன்,பி.டில்லிபாபு,சாமி நடராஜன், ஸ்டாலின் மணி, டி.கண்ணன், ஆர்.சச்சிதானந்தம்,ஜி.மாதவன்,துளசி நாராயணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.பின்னர் நடைபெற்ற பேரணியை அகில இந்திய இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் துவக்கி வைத்தார். செண்டை மேளம் ஒலிக்க அதிர்வேட்டுகள் முழங்க பேரணி புறப்பட்டது. 29 செங்குடைகள், 29 செங்கொடிகள் பேரணியில் அணிவகுத்தன. பேரணியை தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் திருமலைக்கொழுந்து தலைமையிலும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை தலைமையிலும் வாழ்த்து முழக்கம் எழுப்பி வரவேற்றனர்.
கம்பம் காந்திநகரிலிருந்து துவங்கிய பேரணி நகராட்சி அலுவலகம், நாட்டுக்கல், கம்பம் மெட்டுச்சாலை, எல்எப் சாலை, வேலப்பர் கோவில் வழியாக வ.உ.சி. திடலை வந்தடைந்தது. பேரணியின் முடிவில் ஜி.எம்.நாகராஜன் வரவேற்புரையோடு துவங்கிய பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, அகிலஇந்திய துணைத் தலைவர் கே.வரதராசன், அகில இந்தியஇணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலதுணைத்தலைவர் டி.ரவீந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் கே.தயாளன் நன்றி கூறினார்.பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து உழவர் கலை விழா நடைபெற்றது. புதுகை பூபாளம். கரிசல் கருணாநிதி, செம்மலர் கலைக்குழு ஆகியோரின் கலை நிகழ்வுகளும் செவக்காட்டு நாடகக்குழுவின் நாடகங்களும் இடம் பெற்றன.பன்முக கலைஞர் பாரதி கிருஷ்ணகுமார், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.