புரோ கபடி: சொந்த மண்ணில் பெங்கால் வாரியர்ஸ் திரில் வெற்றி
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி, 41-38 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை தோற்கடித்தது.
சொந்த மண்ணில் விளையாடிய முதல் ஆட்டத்தில், ஆரம்பத்தில் தடுமாறிய பெங்கால் அணி, கடைசி கட்டத்தில் அபாரமாக ஆடி த்ரில் வெற்றி கண்டது. அதே நேரத்தில், ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய பாட்னா அணி அதீத நம்பிக்கையுடன் விளையாடியதால் கடைசி கட்டத்தில் தோற்க நேரிட்டது.
இந்த ஆட்டத்தில் பாட்னாவை வீழ்த்தியதன் மூலம், 5-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ள பெங்கால், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தைக் காணவும், பெங்கால் அணியை உற்சாகப்படுத்தவும் கடும் மழைக்கு மத்தியிலும் ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுத்தனர். விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாட்னா அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு 4-7 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கிய பெங்கால் அணி, ஆல்-அவுட் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது, பெங்கால் அணியின் இரு பின்கள வீரர்கள், பாட்னாவின் முன்னணி ரைடர் மானு கோயத்தை அற்புதமாக டேக்கிள் செய்தனர். அதைத் தொடர்ந்து மணீந்தர் சிங்கின் அபார ரைடால் ஸ்கோரை சமன் (7-7) செய்தது பெங்கால்.
பின்னர் பெங்கால் அணி அபாரமாக ஆட, ஆல்-அவுட் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்ட பாட்னா, சூப்பர் டேக்கிள் மூலம் அதிலிருந்து மீண்டது. அதன் கேப்டன் பிரதீப் நர்வாலும், மானு கோயத்தும் ரைடுகளின் மூலம் அடுத்தடுத்த புள்ளிகளைப் பெற்றுத் தந்தனர்.
இதனால் நெருக்கடிக்குள்ளான பெங்கால், ஆல்-அவுட்டானது. முதல் பாதி ஆட்டநேர முடிவில் பாட்னா 18-14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் மீண்டும் ஒருமுறை பெங்கால் அணியை ஆல் அவுட்டாக்கிய பாட்னா, 34-25 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன் பிறகு பெங்கால் கேப்டன் குன் லீயும், அந்த அணியின் ரைடர் மணீந்தர் சிங்கும் அசத்தலாக ஆட பாட்னா ஆட்டம் கண்டது. கடைசி 4 நிமிடங்களில் அபாரமாக ஆடிய பெங்கால் அணி, பாட்னாவை ஆல் அவுட்டாக்கியதுடன், ஸ்கோரையும் சமன் (38-38) செய்தது.
இதனால் நம்பிக்கை பெற்ற பெங்கால் அணி அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றி 41-38 என்ற புள்ளிகள் கணக்கில் திரில் வெற்றி கண்டது. பெங்கால் ரைடர் மணீந்தர் சிங் 19 முறை ரைடுகளில், 13 புள்ளிகளை பெற்றுத் தந்தார். பாட்னா கேப்டன் பிரதீப் நர்வால் 11 புள்ளிகளை பெற்றுத்தந்த போதிலும் அவருக்கு மற்ற வீரர்களின் உதவி கிடைக்காததால் அந்த அணி தோற்க நேரிட்டது.
இன்றைய ஆட்டம்
குஜராத் ஃபார்சூன்ஜயண்ட்ஸ்-
ஹரியாணா ஸ்டீலர்ஸ்
நேரம்: இரவு 8
பெங்கால் வாரியர்ஸ்-யு.பி.யோதா
நேரம்: இரவு 9
இடம்: கொல்கத்தா
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.