அதிமுகவில் மீண்டும் ஒரு “கூவத்தூரா..?”
தினகரனுக்கு 19 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.இவர்கள், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்து இன்று கவர்னரை சந்திக்க போவதாக அறிவித்தனர். இன்று விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ., உமா மகேஸ்வரி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் தினகரன் பலம், 19 ஆக அதிகரித்தது.
கவர்னர் மாளிகை சென்று, வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக தனித்தனியாக கடிதம் வழங்கினர். ஓபிஎஸ் பதவி விலகிய போது அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேர் கூவத்தூர் அழைத்து சென்று சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பிற்காக சட்டசபைக்கு நேரில் அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும், கவர்னரை சந்தித்த பின்னர், சென்னை எழும்பூரில் உள்ள ரேடிசன் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.