“டிஐஜி ரூபாவின் இடமாற்றத்திற்கு கிரண்பேடி கண்டனம்”
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறை பெண் டி.ஐ.ஜியாக பதவி வகித்தவர் ரூபா. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, சிறைக்குள் பல நவீன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றது என்றும் இதற்காக டி.ஜி.பி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் புகார் தெரிவித்ததோடு அது சம்மந்தப்பட்ட ஆவணங்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார் ரூபா. இந்த விவகாரம் இந்திய அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த வாரம் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான கிரண்பேடி, “உங்களின் இந்த துணிச்சலான நடவடிக்கையால் நீங்கள் இடமாற்றம் செய்யப்படலாம். நீங்கள் எங்கே பணியாற்றினாலும் இதே உறுதியுடன் இருக்க வேண்டும். உங்களைப் போன்றவர்கள்தான் இந்தியாவுக்குத் தேவை. கண்டிப்பாக நீங்கள் எதிர்காலத்தில் இளைய தலைமுறைக்கு ஊக்குவிக்கும் சக்தியாக இருப்பீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் டிஐஜி ரூபாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
நாடெங்கிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது கர்நாடக அரசு. அதற்குள் சசிகலா சம்மந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாக புகாரைக் கிளப்பினார் ரூபா. இதையடுத்து, பெங்களூரு சாலை மற்றும் போக்குவரத்துத்துறைக்கு கமிஷனராக அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார் ரூபா. இந்நிலையில் இந்த இடமாற்றம் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், “அஹமதாபாத்தில் நடைபெற்றக் கருத்தரங்கில் கலந்து கொண்டததால் தற்போதுதான் எனக்கு நேரம் கிடைத்தது. சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். இது போன்ற சூழலில் ரூபாவை இடமாற்றம் செய்திருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் இதற்கு மேல் எதுவும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத்தான் இதனை பார்க்க முடிகிறது. இப்படியான நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசு அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது மாற்றப்பட்டுள்ள பணியிடத்திலும் இதே போன்ற பணியை ரூபா தொடர வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.