அதிகார பீடத்தில் ஆர்எஸ்எஸ் – பாஜக தேசப்பற்றுக்கு விடப்பட்ட சவால்
வீரஞ்செறிந்த நமது சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் – குறிப்பாக 1920களில், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் எப்படிப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்து மூன்று வேறுபட்ட கண்ணோட்டங்களுக்கிடையே மோதல்கள் நடைபெற்றன.சுதந்திர இந்தியா தனது 71ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற தருணத்தில், தற்போது நடைபெற்று வரும் அரசியல் மற்றும் பொருளாதார மோதல்கள் சுதந்திர போராட்டக் காலத்தில் நடைபெற்ற மோதல்களின் நீட்சியே என்பதனை நினைவு கூர்வது அவசியமாகும்.
மூன்று கண்ணோட்டங்கள் எவை?
சுதந்திர இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இருக்க வேண்டுமென்ற கண்ணோட்டத்தை காங்கிரஸ் முன் வைத்தது. இந்த நோக்கத்தை ஏற்றுக் கொள்கிற அதே நேரத்தில், சோசலிசத்தின் கீழ் மட்டுமே சாத்தியமான – ஒவ்வொரு தனிநபருக்குமான பொருளாதார விடுதலையை அடைந்திட தேசத்தின் அரசியல் விடுதலை விரிவுபடுத்தப்பட வேண்டுமென்பதை இடதுசாரிகள் முன்வைத்தனர்.இந்த இரண்டு கண்ணோட்டங்களுக்கும் எதிரான மூன்றாவது கண்ணோட்டம், சுதந்திர இந்தியாவின் தன்மை அதன் மக்களின் மத நம்பிக்கைகளால் வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டுமென வாதிட்டது. ‘இஸ்லாமிய நாட்டை’ முஸ்லீம் லீக் கட்சியும், ‘இந்து ராஷ்டிரத்தை’ ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஆதரிக்கின்ற இரட்டைக் கருத்தை இக்கண்ணோட்டம் கொண்டிருந்தது.
துரதிர்ஷ்டவசமாக ஆங்கிலேயர்களின் உதவியுடனும், ஊக்குவிப்புடனும் தேசத்தை பிரித்திடுவதில் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி பெற்றது. தேசப் பிரிவினையின் எல்லா பின்விளைவுகளும் ஏற்படுத்திய பதற்றங்கள் இன்று வரை தொடர்கின்றன. நாடு விடுதலையடைகிறபோது தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் போன ஆர்எஸ்எஸ் அமைப்பினர், நவீன இந்தியாவை தாங்கள் விரும்பிய வெறித்தனம் மிகுந்த, சகிப்புத்தன்மையற்ற பாசிச ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றிடுவதற்கான முயற்சியைத் தொடர்கின்றனர்.சமகால இந்தியாவில் நடைபெறும் தத்துவார்த்த மோதல்களும், அரசியல் முரண்பாடுகளும் ஒருவிதத்தில் இத்தகைய மூன்று கண்ணோட்டங்களுக்கிடையே நடைபெற்ற மோதல்களின் தொடர்ச்சியே ஆகும். ஏகாதிபத்தியத்தின் அடிமைத்தளையிலிருந்து விடுபடாமல், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை உடைத்தெறியாமல், ‘‘மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா’’ என்ற காங்கிரஸ் கட்சியின் கண்ணோட்டத்தை நீடிக்கச் செய்வது சுதந்திர இந்தியாவில் எப்போதுமே சாத்தியமில்லை என்ற வாதத்தை இடதுசாரிகள் முன்வைத்தனர்.
தற்போதும் அந்நிலைபாட்டையே கொண்டுள்ளனர். சுதந்திர இந்தியாவில் ஆளும் வர்க்கங்களான பெரும் முதலாளிகளின் தலைமையில் நிலப்பிரபுக்களுடன் கூட்டு வைத்துள்ள முதலாளிகளின் நலன் பேணும் நடவடிக்கையை மேற்கொண்டதன்காரணமாக தேச விடுதலைப் போராட்டத்தை இயல்பான உச்சநிலையை அடையச் செய்திட காங்கிரஸ் கட்சியால் இயலாமல் போய்விட்டது. மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் அடித்தளங்களை இத்தகைய நடவடிக்கைகள் பலவீனமடையச் செய்கின்றன. முதலாவதாக, தேச விடுதலைப் போராட்டக் காலத்தில் மக்கள் ஒற்றுமைக்கு வழிவகுத்த சமூகத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை இத்தகைய நடவடிக்கை பின்னுக்குத் தள்ளுகிறது.
இரண்டாவதாக, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பெரும்பான்மையினராக அதிகரித்து வரும் சுரண்டப்படும் வர்க்கத்தை விலக்கி வைக்கிறது. சுதந்திர இந்தியாவில் கடந்த 70 ஆண்டு காலமாக நமக்கு கிடைத்துள்ள அனுபவங்கள் இதனையே மெய்ப்பிக்கின்றன. செயல்படுத்தப்பட்ட மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக எழுந்து வரும் அதிருப்தியை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மதவாத சக்திகள் அல்லது மூன்றாம் வகையான கண்ணோட்டம் கொண்டவர்கள் தங்களை வலுப்படுத்திக் கொள்ள இத்தகைய நடவடிக்கை பயனளித்தது.
நான்கு அடிப்படைத்தூண்கள்
மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சிக் கோட்பாடு, சமூக நீதி மற்றும் பொருளாதார சுயச்சார்பு ஆகிய நான்கு அடிப்படைத் தூண்களின் மீதே நமது அரசியல் சாசனம் அமைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல்கள் மற்றும் அதற்குப் பின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்து இந்த அடிப்படைகள் ஒவ்வொன்றும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் அச்சுறுத்தல்களை நாம் இங்கு முக்கியமாக முன் வைக்கிறோம்.இந்திய நிலைமைகளில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை, பிரிக்க இயலாதவை என்பதனை அச்சொற்றொடர்களே தெரிவிக்கின்றன. பல்வேறு வேற்றுமைகளும் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட இந்திய அரசு எனும் கட்டமைப்பின் கீழ் வந்திருப்பதில் இது இயல்பானதேயாகும்.
இத்தகைய வேற்றுமையுடனான அனைத்துப் பிரிவினருக்கும் சமமான அங்கீகாரம், கண்ணியம் மற்றும் வாய்ப்புகளை அளிப்பதன் மூலமே இத்தகைய ஒற்றுமையை பாதுகாத்திட இயலும். இத்தகைய வேறுபாடுகளின் மீது ஒற்றைத் தன்மையைத் திணிக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் இந்திய நாட்டினுள் சமூகப் பதற்றத்தையே ஏற்படுத்திடும்.
இத்தகைய வேற்றுமைக்கு இடையே காணப்படும் பொதுத்தன்மைகளை வலுப்படுத்துவதன் மூலமே இந்தியாவின் ஒற்றுமையையும், கண்ணியத்தையும் ஒருங்கிணைத்திட இயலும். இந்திய அரசின் நிர்வாக முறை மற்றும் சமூகத்தை வழி நடத்தும் மதச்சார்பற்ற கொள்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த வாக்குரிமையின் அடிப்படையிலான ஜனநாயகம் ஆகிய இரண்டுடனும் இத்தகைய நடைமுறை இணைந்திருப்பது அவசியமாகும். இத்தகைய நடைமுறையை ஒருங்கிணைப்பதே இன்று கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது.
கூர்மையடையும் மதவெறி; கூர்மைப்படுத்தும் ஊடகங்கள்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் தற்போதைய பாஜக அரசு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தூண்கள் அனைத்தின் மீதும் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதோடு மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நடைமுறையும் தொடர்ச்சியாக கூர்மையடைந்து வருகிறது.
‘பசுப்பாதுகாவலர்கள்’ மற்றும் ‘சமூக நல்லொழுக்கப் பாதுகாவலர்கள்’ என்ற பெயரிலான ரௌடிக் கும்பல்களின் கொலைவெறித் தாக்குதல்கள் இத்தகைய முயற்சிகளின் பிரதிபலிப்பே ஆகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒவ்வொரு அமைப்பும் ஊடுருவப்பட்டு, மதமயமாக்கப்பட்டு வருகிறது. மதரீதியாக மக்களை அணிதிரட்டுவதை கூர்மைப்படுத்திடவும், வரலாற்றை மாற்றி எழுதிடவும் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் ஆர்எஸ்எஸ்காரர்களால் ஊடுருவப்பட்டு வருகின்றன. எல்லா பொது இடங்களையும் மதமயமாக்கிட வெறித்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய தாக்குதல்களுக்கு முன்னதாக மதச்சார்பற்ற, ஜனநாயக மக்கள் பிரிவினர் அச்சுறுத்தப்படுகிறார்கள்.மோடி குறித்த செய்திகள் மட்டுமே பரப்பப்படுவதனை உத்தரவாதம் செய்திட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகத்தின் முழுமையான கட்டுப்பாடு உள்ளது. தனியார் ஊடகமும் பெரிய அளவில் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மையநீரோட்ட ஊடகத்தில் வரும் செய்திகள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் முழு ஆதிக்கத்தில் இருப்பதனை அரசு-தனியார் கூட்டு உத்தரவாதம் செய்கிறது.
பதிலளிக்கும் பொறுப்பு மறுப்பு
நமது அரசியல் சாசனத்தின் கீழ், இந்தியாவின் இறையாண்மை மக்களிடமே உள்ளது. எனவேதான், “மக்களாகிய நாங்கள் …… இந்த அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டு, நிறைவேற்றி, எங்களை அர்ப்பணித்துக் கொள்கிறோம்” என்ற வாசகத்துடன் அரசியல் சாசனம் துவங்குகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் தேர்ந்தெடுத்திடும் பிரதிநிதிகளின் வாயிலாக மக்கள் இந்த இறையாண்மையைப் பயன்படுத்துகிறார்கள். அரசுகள், சட்டமன்றங்களுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்புடையவை ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள் ஆவர். இவ்வாறே இந்நடைமுறை செயல்பட வேண்டும்.ஆனால், அரசு மற்றும் மக்கள் இடையேயான முக்கியமான தொடர்பு- அதாவது சட்டமன்றங்கள், சிறப்பாக செயல்படாதபோது – இந்நடைமுறை நொறுங்கிப் போகிறது. பதிலளிக்க வேண்டிய தனது பொறுப்பிலிருந்து அரசு தப்பித்துக் கொள்கிறது. அரசையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் பதிலளிக்கச் செய்யும் அதிகாரம் மக்களுக்கு மறுக்கப்படுகிறது. இதுவே தற்போதைய அரசின் கீழ் நடைபெற்று வருகிறது. எந்தவொரு மசோதாவையும் ‘நிதி மசோதாவாக’ முடிவு செய்திட மக்களவை சபாநாயகருக்கு அரசியல் சாசனத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஆணவத்துடன் இவர்கள் நடந்து கொள்வது, இத்தகைய மசோதாக்கள் மீது விவாதம் செய்து வாக்களிப்பதற்கான உரிமையை மாநிலங்களவைக்கு மறுக்கிறது. மக்களவையில் தற்போது பாஜகவிற்கு பெரும்பான்மை உள்ளதால் மக்களவையை தங்களது எதேச்சதிகாரத்தை வெளிப்படுத்தும் அமைப்பாக மதிப்பிழக்கச் செய்துள்ளது. பாஜக அரசின் இந்த மூன்றாண்டு ஆட்சிக் காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 70 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தது 100 நாட்களுக்காவது நாடாளுமன்றம் கூட வேண்டும் என்ற அரசியல் சாசனப் பூர்வமான நிபந்தனை உத்தரவாதம் செய்யப்படவில்லை எனில், நமது ஜனநாயக முறையில் செயல்பாட்டை நம்மால் வலுப்படுத்திட இயலாது.
நமது தேசப்பற்றுக்கு விடப்பட்ட சவால்
இந்தியாவில் மதச்சார்பற்ற ஜனநாயகம் இன்று நாம் காண்பதனைப் போன்றதொரு கடுமையான தாக்குதலுக்கு இதற்கு முன்னெப்போதும் உள்ளானதில்லை. இந்திய நாட்டின் மீது தேசப்பற்று கொண்டுள்ளோரின் போராட்ட ஒற்றுமையால் மட்டுமே இச்சவாலை எதிர்கொள்ள இயலும். மேலும், நமது மக்களுக்கான மேம்பட்டதொரு இந்தியாவை உருவாக்குவதனை நோக்கி தேசத்தை கொண்டு செல்ல இயலும். நமது பரந்துபட்ட பெரும்பகுதி மக்களின் போராட்டத்தில் உள்ள இத்தகைய ஒற்றுமையால் மட்டுமே தற்போதைய மோடியின் கருத்துக்களுக்கு மாற்றான மக்களின் கருத்துக்களை உருவாக்கிட இயலும்.
தேர்தல் நடைமுறையில் தேவைப்படும் மாற்றம்
வயது வந்த குடிமக்களிடையே எவர் ஒருவருக்கும் எந்தவொரு பாரபட்சமும் காட்டாமல் ஒருங்கிணைந்த வாக்குரிமையை அளித்து ஜனநாயகப் பாதையில் பயணிக்கும் நாடு இந்தியா என நாம் பெருமை கொள்கிறோம். அதே நேரத்தில், ‘அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை பெறுபவர்களே வெற்றி பெற்றவர்கள்’ என்ற நடைமுறையானது, இந்திய மக்களுக்கு ஜனநாயகத்தை மறுக்கிறது. பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றவர்களே வெற்றி பெற்றவர்கள் என்றே பொதுவாக ஜனநாயகம் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
நாடு விடுதலையடைந்ததிலிருந்து, பதிவான வாக்குகளில் 50 சதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை எந்தவொரு மத்திய அரசும் பெறவில்லை. ஒட்டுமொத்த வாக்குகளில் 50 சதத்திற்கும் கூடுதலான வாக்குகளைக் கூட பெறவில்லை. தற்போது அதிகாரத்திலிருக்கும் பாஜக தலைமையிலான அரசு, பதிவான வாக்குகளில் வெறும் 31 சதவீத வாக்குகளை பாஜகவும், 39 சதவீத வாக்குகளை கூட்டணியாகவும் பெற்றது. ஜனநாயகத்தை வலுப்படுத்திட இத்தகைய நடைமுறையில் மாற்றம் தேவைப்படுகிறது. விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் இதனை செயல்படுத்திடலாம்.
இத்தகைய விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறையில், வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதுடன், கட்சிகளின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்திடுவர். இந்த அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தாங்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிட விரும்பும் நபர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளித்திடும். நாடு முழுவதிலும் கட்சிகள் பெறும் வாக்குகளைப் பொறுத்து, பெற்ற வாக்குகளின் விகிதாச் சாரத்திற்கேற்ற எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு செல்வர். இத்தகைய நடைமுறை வந்தால் அரசின் பெரும்பான்மை அம்சத்தை உத்தரவாதம் செய்திடும். அதே நேரத்தில், வேற்றுமையை உள்ளடக்கியுள்ள இந்தியாவில் மக்கள் தங்களது சமூகம்/மண்டலம்/மொழி ஆகியன சார்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறச் செய்வதற்கான தேவையையும் பாதுகாக்கிறது.
மேலும், அபாயகரமான அளவிற்கு அதிகரித்து வரும் பண பலத்தின் அபாயத்திலிருந்து தேர்தல் நடைமுறையை நம்மால் பாதுகாத்திட முடிந்தால் மட்டுமே ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை நம்மால் மேம்படுத்திட இயலும். இதனைச் செய்து முடித்திட, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பதை தடுத்திடுவது, இன்று எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் உள்ள அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களுக்கு வரையறையைவிதிப்பது, தேர்தல் செலவினங்களுக்கு அரசு நிதியளிப்பது ஆகிய நடவடிக்கைகளை துவங்கிட வேண்டும். இந்திய ஜனநாயகத்திற்கு கார்ப்பரேட்டுகள் தங்களது பங்கினை செலுத்திடச் செய்ய வேண்டும். ஆனால், இத்தொகைகள் தேர்தல் ஆணையம் அல்லது வேறு ஏதேனும் அரசு அமைப்பினால் பராமரிக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட வேண்டும்.
இத்தகைய திசை வழியில் நகர்வதற்குப் பதிலாக, நேர் எதிர் திசையில் பயணிப்பதையே மோடி அரசு தேர்வு செய்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் அளிக்கும் நன்கொடையின் அளவிற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த விதிகளையெல்லாம் தற்போது மோடி அரசு ரத்து செய்துள்ளது. தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக கார்ப்பரேட்டுகள் நிதியளிப்பதை முற்றிலுமாக வெளிப்படைத்தன்மையற்றதாக ஆக்கியுள்ளது. மேலும், இவ்வாறு செய்வதன் வாயிலாக அரசியல் ஊழலை சட்டப்பூர்வமான ஒன்றாக ஆக்கியுள்ளது. இவையெல்லாம் நமது ஜனநாயகத்தை மேலும் சீர்குலைத்திடும் மோசமான நடவடிக்கைகளாகும்.
தமிழில்: ராகினி
நன்றி: தீக்கதிர்