விம்பிள்டன் டென்னிஸ்: முகுருஸா சாம்பியன்

Default Image

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா.
அதேநேரத்தில் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீராங்கனை என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பை இழந்தார் அமெரிக்காவின் 37 வயது வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் கார்பைன் முகுருஸா 7-5, 6-0 என்ற நேர் செட்களில் வீனஸ் வில்லியம்ûஸ தோற்கடித்தார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை சற்று போராடி 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய முகுருஸா, அடுத்த செட்டில் வீனஸின் 3 சர்வீஸ்களை முறியடித்து அந்த செட்டை 6-0 என்ற கணக்கில் வென்றார். இதனால் 1 மணி, 17 நிமிடங்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 
இதன்மூலம் விம்பிள்டனில் பட்டம் வென்ற 2-ஆவது ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் முகுருஸா. முதல் நபர் முகுருஸாவின் தற்போதைய பயிற்சியாளர் கான்சிடா மார்ட்டினிஸ் ஆவார். அவர், 1994-இல் நடைபெற்ற விம்பிள்டன் இறுதிச் சுற்றில் மார்ட்டினா நவரத்திலோவாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கும் முகுருஸா, அது குறித்து கூறியதாவது: முதல் செட் கடினமாக இருந்தது. ஏனெனில் இருவருக்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் இறுதியில் அந்த செட்டை கைப்பற்றியதன் மூலம் நான் உத்வேகம் பெற்றேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விம்பிள்டன் இறுதிச் சுற்றில் வீனஸின் சகோதரி செரீனாவிடம் தோல்வியடைந்தேன். அப்போது அவர், இங்கு நீங்களும் ஒரு நாள் பட்டம் வெல்வீர்கள் என்று என்னிடம் கூறினார். இப்போது நான் சாம்பியனாகிவிட்டேன் என்றார். விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தரவரிசையில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் முகுருஸா.
இறுதி ஆட்டம் முடிந்த பிறகு பேசிய வீனஸ், “முகுருஸாவுக்கு வாழ்த்துகள். இதற்காக நீங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். பிரெஞ்சு ஓபனில் முகுருஸா சாம்பியன் பட்டம் வென்றதைப் பார்த்தபோது, அவர் குறைந்தபட்சம் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களாவது வெல்வார் என நினைத்தேன். ஆனால் இப்போது அதைவிட அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அவர் வெல்வார் என நினைக்கிறேன்.
முகுருஸாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தைப் பொறுத்தவரையில் எனது சகோதரி செரீனாவைப் போன்று என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். ஆனால் பலன் கிடைக்கவில்லை. நான் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்’ என்றார்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்