சீன ஓபன் டென்னிஸ்:அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள் ரஃபேல் நடால், ஹேலப்….!
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினர்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், பிரான்சின் லூகாஸ் புய்லேவுடன் மோதினார்.
இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் நடால் 4-6, 7-6(6), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.
நடால் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் காரென் காசாநோவை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் மற்றும் போஸ்னியாவின் டாமிர் ஸும்ஹூருடன் மோதினார்.
இதில், கிரிகோர் டிமிட்ரோவ் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் டாமிர் ஸும்ஹூரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
கிரிகோர் டிமிட்ரோவ் தனது 4-வது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை எதிர்கொள்கிறார்.
போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் டுனீசியாவின் மாலெக் ஜாஸிரியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.
அடுத்தச் சுற்றில் அவர் ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயரை எதிர்கொள்கிறார்.
போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் 6-3, 0-6, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேர்டு டொனால்ட்சனை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக 3-வது சுற்றில் சைமோனாவை எதிர்கொண்ட ஸ்லோவேகியாவின் மெக்தலினா ரைபரிகோவா காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேற 6-1, 2-1 என்ற செட் கணக்கில் சைமோனா வென்றதாக அறிவிக்கப்பட்டது.
சைமோனா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ரஷியாவின் மரியா ஷரபோவாவை எதிர்கொள்கிறார்.
உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
அடுத்த சுற்றில் அவர் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவை எதிர்கொள்கிறார்.
போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வர்வரா லெப்சென்கோவை வென்றார்.
கிவிட்டோவா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கியை சந்திக்கிறார்.
இதனிடையே, போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா 7-5, 7-5 என்ற செட் கணக்கில் சீனாவின் ஸாங் ஷுவாயை வீழ்த்தினார்.
செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைக்கோவா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸை வீழ்த்தினர்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – சீனாவின் பெங் ஷுவாய் இணை தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் டெமி ஷ்ரூஸ் – பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் இணையை வீழ்த்தியது.