உலகின் அடுத்த கிராண்ட் மாஸ்டராக வலம்வர போகும் இந்தியாவின் அரிகிருஷ்ணா ……..!
ஜெனீவா :ஜெனீவாவில் நடைபெறும் ஜெனீவா ஃபிடே கிராண்ட்ப்ரீ செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் உலகின் 4-ஆம் நிலை வீரை வீழ்த்தி இந்தியாவின் அரிகிருஷ்ணா ஏழாவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஜெனீவா ஃபிடே கிராண்ட்ப்ரீ செஸ் போட்டி ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 6-ஆவது சுற்றில் அரிகிருஷ்ணாவும், உலகின் 4-ஆம் நிலை வீரரான ஆர்மேனியாவின் ஆரோனியனும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் அபாரமாக ஆடினாலும், ஒருக் கட்டத்தில் அரிகிருஷ்ணா ஆட்டத்தை தனது வசமாக்கி வெற்றிப் பெற்றார்.
இதுவரை ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ள அரிகிருஷ்ணா 2 வெற்றிகளையும், 4 சமன்களையும் அடைந்து 4 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இதன்மூலம் ரஷியாவின் அலெக்சாண்டர் கிரைசுக், அஜர்பைஜானின் டெய்மூர் ராட்ஜபோவுடன் முதலிடத்தில் உள்ளார் அரிகிருஷ்ணா.
அரிகிருஷ்ணா தனது 7-ஆவது சுற்றில் ரஷியாவின் அலெக்சாண்டர் கிரைசுக்கை சந்திக்கிறார்.
வெற்றி குறித்து அரிகிருஷ்ணா பேசியது:
“இருவரும் சிறப்பாக ஆடியதால் ஆட்டம் முழுவதும் சமமான நிலையே இருந்தது. ஆனால் லெவோன் ஆரோனியன் தவறாக காயை நகர்த்திய பிறகு ஆட்டம் எனது பக்கம் திரும்பியது. அதனால் நான் வெற்றி பெற முடிந்தது.
அலெக்சாண்டர் கிரைசுக், ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தக்கூடிய வீரர். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். எதிராளி சற்று சறுக்கினாலும், அதைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடுவார்.
ஆறாவது சுற்றைப் போன்றே 7-ஆவது சுற்றிலும் சிறப்பாக ஆடுவேன் என நம்புகிறேன்” என்று அவர் பேசினார்.