புதுச்சேரியில் புதிய கட்டண கொள்கைக்கு எதிர்ப்பு : முதல்வர் நாராயணசாமி பதில்
புதுச்சேரி: புதிய பேருந்து கட்டண கொள்கை இல்லை எனவும் பழைய கட்டணமே தொடரும் எனவும் முதல்வர் திரு நாராயணசாமி தெரிவித்துள்ளார் .
புதுச்சேரியில் கடந்த 17-ம் தேதி 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு அறிவித்தது. அதனால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயக்கப்படும் நகர சேவை பேருந்துகளுக்கு முதல் நிலை ரூ.5ஆகவும், அதன்பின் ஒவ்வொரு நிலைக்கும் ரூ.2க்கு மிகாமலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
விரைவு அல்லாத நிலை நிறுத்த பேருந்துகளுக்கு முதல் 6 கி.மீ. வரை உள்ள தூரத்திற்கு ரூ.8க்கு மிகாமலும், விரைவு பேருந்துகளுக்கு முதல் 25 கி.மீ. தொலைவுக்கு ரூ.25-க்கு மிகாமலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து கோரிமேடு செல்ல ரூ.9-ம், புதுச்சேரி – காலாப்பட்டுக்கு ரூ.14, புதுச்சேரி – திருக்கனூருக்கு ரூ.20, புதுச்சேரி – வில்லியனூருக்கு ரூ.14 என பொதுமக்களிடம் பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு ரூ.20ம், விழுப்புரத்திற்கு ரூ.26ம், திண்டிவனத்துக்கு ரூ.24ம் வசூலித்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்த கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். பேருந்து கட்டணத்தை திரும்பப்பெறக்கோரி திமுக, அதிமுக சார்பில் முதல்வர் நாராயணசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆதலால் இன்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர் . திமுக எம்எல்ஏ சிவா, அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர் ஆகியோரும் பங்கேற்றனர் .
கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது,
புதுச்சேரியில் பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று பொதுமக்கள், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து அனைத்து எம்எல்ஏக்களும் என்னை சந்தித்து குறை கூறினார்கள். இதையடுத்து, அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அழைத்து பேசி கருத்துகளை கேட்டேன்.
இந்நிலையில் பொதுமக்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரது கருத்தும் ஒத்துப்போகிறது. எனவே, அமைச்சர் ஷாஜகான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதத்தில் இதற்கான தீர்வு கிடைக்கும் என அதுவரை பொது மக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் திரு நாராயண சாமி கேட்டு கொண்டார் .