அரசுப்பள்ளிகளின் அவலநிலை….காதுகள் இல்லாத தமிழக கல்வித்துறை….!
ராமநாதபுரம்: தமிழகத்தில் நடு நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன, புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் நிறைவு பெற்றும் பயன்பாட்டுக்கு வராததால், மரத்தடியில் மாணவர்கள் கல்வி கற்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் சார்பில் 2011-12 கல்வியாண்டில் 720 பள்ளிகள் நடுநிலைப்பள்ளியாக இருந்ததை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. சட்டசபையில் 110 ம் விதிகளின் படி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படியே மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளுக்காக அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவங்கி தற்போது பல பள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற பின்னரும், மாணவர்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 26 பள்ளிகள் தரம் உயர்த்தப் பட்டன.எஸ்.கொடிக்குளம், கடுகு சந்தை, குருவாடி, இதம்பாடல், வல்லக்குளம், புனவாசல், பெருங்குளம், கல்கிணற்றுவலசை, உலையூர், வளநாடு, கலையூர், சக்கரக் கோட்டை, தினைக்காத்தான் வயல், காஞ்சிரங்குடி, தளிர்மருங்கூர், களிமண்குண்டு, பனையடியேந்தல் உட்பட பல இடங்களில் புதிய வகுப்பறை கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பல பள்ளிகளில் புதிய வகுப்பறை, லேப் வசதிகளுடன் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
பணிகள் முடிந்த பின்னும் மாணவர்கள் பயன்பாட்டுக்கு வராததால், மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இன்னும் பல பள்ளிகளில் மாணவர்கள் மரத்தடியிலேயே கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் சிரமப்படும் நிலையில், புதிய வகுப்பறை எதற்காக காத்திருக்கிறது. குறிப்பாக தினைகாத்தான் வயல், தளிர்மருங்கூர், சக்கரக்கோட்டை, உள்ளிட்ட பல பள்ளிகளில் மாணவர்கள் மரத்தடியில் தான் வகுப்பறை உள்ள மாணவர்கள் திறந்த வெளியில் கல்வி கற்பதால், கவன சிதைவு, கோடை வெப்ப நேரங்களில் வெயிலுக்கு தகுந்தாற் போல் நகரும் வகுப்பறையாக உள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டுமான பணிகள் முடிவடைந்த பள்ளிகளில் அதனை திறந்து, மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தனியார் பள்ளிகளுடன் போட்டியிடும், அரசுப்பள்ளிகளில் இது போன்று அடிப்படை வசதியில்லாமல் மாணவர்களை தவிக்க விடுவது எந்த வகையில் நியாயமானது. உடனடியாக கட்டுமான பணிகள் முடிந்த இடங்களில் மாணவர்கள் வகுப்பறையில் கல்வி கற்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும், என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.