ராமர் பால வழக்கு ; சுப்பிரமணிய சாமி மனுமீது உச்ச நீதிமன்றம் பரபரப்பு அறிவிப்பு
ராமர் பாலம் தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திர அறிக்கை தாக்கல் செய்தபிறகு இப்பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு பா.ஜ.க. பி்ரமுகர் சுப்பிரமணிய சாமிக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராமர் பாலம் தொடர்பாக தனது நிலைபாட்டை மத்திய அரசு விரைவில் தெரிவிக்க உத்தரவிடவேண்டும் என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் முன்பு ஒரு முறை வாதிட்ட சுப்பிரமணிய சாமி, சேது சமுத்திர கால்வாய் அமைத்தால் அதில் ராமர் பாலத்தை எந்த விதத்திலும் சேதப்படுத்த மாட்டோம் என மத்திய அரசு நீதிமன்றத்திற்கு வெளியே தெளிவுபடுத்தியுள்ளது என தெரிவித்திருந்தார்.
அறிக்கைக்கு பிறகு விசாரணை
ராமர் பாலம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என அவர் தற்போது உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், ராமர் பாலம் தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திர அறிக்கை தாக்கல் செய்தபிறகு அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
கடந்த 2015 நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்திருந்த மனுவில், ராமர் பாலம் பாதிக்கப்படாமல் சேது சமுத்திர கால்வாய் அமைக்கப்படுமானால் , அந்த கால்வாய் அமைப்பதற்கு எதிராக தான் 2009-ல் தொடர்ந்துள்ள வழக்கை விலக்கிக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமர் இலங்கைக்கு சென்றதாக கூறப்படும் ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது என்பதால், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த பா.ஜனதா கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.