மாநிலங்களவைத் தேர்தலில் சீத்தாராம் யெச்சூரி ஏன் போட்டியிட மாட்டார் ? – சிபிஎம் விளக்கம்

Default Image

புதுதில்லி–மேற்கு வங்கத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலுக்கு மீண்டும் சீத்தாராம் யெச்சூரி போட்டியிடாததற்கான  காரணங்களை மத்தியக்குழு வெளியிட்டுள்ளது.

கட்சியின்  மேற்கு வங்க மாநில செயற்குழு, தோழர் சீத்தாராம் யெச்சூரியிடம், அவரது தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிவடையும் போது மீண்டும் தேர்தலில் நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது. இந்த விஷயத்தை 2017 ஜூன் 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெற்ற அரசியல் தலைமைக்குழு விவாதித்தது. மேற்கு வங்க மாநில செயற்குழுவின் முன்மொழிவை ஏற்பதில்லை என்று அது முடிவு செய்தது.

இவ்வாறு முடிவு செய்ததற்கான காரணங்கள் வருமாறு:

1)  தற்சமயம் மேற்கு வங்க சட்டமன்றத்தில் இடதுமுன்னணிக்கு 31 இடங்கள் மட்டுமே இருக்கின்றன. அவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்றால், 37 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மட்டுமே இயலும். இதன் பொருள், கட்சியின் பொதுச் செயலாளர் மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன்தான் செல்ல முடியும் என்பதாகும். இத்தகையதொரு புரிதல், கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடு வகுத்துத்தந்துள்ள அரசியல் உத்திகளுடன் ஒத்துப்போகவில்லை.

2) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1964இல் நிறுவப்பட்டதிலிருந்தே ஸ்தாபன நடைமுறை என்னவெனில், பொதுச் செயலாளர் என்பவர், அரசியல்-ஸ்தாபனப் பணிகள் மீது தன் பிரதானமான கவனத்தை செலுத்த வேண்டியவர் என்பதால்,  நாடாளுமன்றத்தின் அமைப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளக்கூடாது என்பதாகும்.  தோழர் சீத்தாராம் யெச்சூரி, 2015இல் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது, அவர் மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்தார். அரசியல் தலைமைக்குழு அந்தப் பதவிக்காலத்தை அவர் முடித்துக்கொள்ளட்டும் என்று அவருக்கு அனுமதி அளித்திருந்தது. ஏனெனில் அவர் அதனை ராஜினாமா செய்திருந்தார் எனில் அது திரிணாமுல் காங்கிரசுக்கு வாய்ப்பாகப் போயிருக்கும்.

3) ஓர் உறுப்பினருக்கு இரு முறைதான் என்கிற வரையறையை கட்சி முப்பதாண்டுகளுக்கு முன்பே கொண்டுவந்துவிட்டது. நாடாளுமன்ற அமைப்புகளுக்குப் புதிய தலைவர்கள் வருவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றே இந்த நெறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒன்றும் நெழிவுசுளிவற்ற ஒரு நெறிமுறை அல்ல. ஆனால், மேலே கூறிய இரு காரணங்களால், இதனைத் தளர்த்திட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

2017, ஜூலை 26-27 தேதிகளில் நடைபெற்ற மத்தியக்குழுக் கூட்டம், அரசியல் தலைமைக்குழுவின் முடிவை மத்தியக்குழுவின் முன் ஒப்புதலுக்காக முன்வைத்தது. மத்தியக்குழுவும், இந்த விஷயத்தை விவாதித்தபின், அரசியல் தலைமைக்குழுவின் முடிவே சரியானது என்று முடிவு செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்