ஜெர்மனியில் பிச்சை எடுக்கும் இந்திய ஒலிம்பிக் வீராங்கனை..
இந்தியாவைச் சேர்ந்தவர் காஞ்சனாமாலா பான்டே. கண்பார்வையற்றவரான இவர் நீச்சல் வீராங்கனை. பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ஜெர்மனியில் உள்ள பெர்லின் சென்றுள்ளார்.
போட்டியில் கலந்து கொள்வதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் அவரது கைக்கு கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் கடன் வாங்கும் நிலைக்கும் பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்.
சோதனையிலும் சாதனை
இத்தனை வேதனையிலும் மனம் தளராது போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மேலும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். இதுகுறித்து பிரிட்டன் நாட்டு தினசரி ஒன்றில் செய்தி வெளியானது. இது கடந்த 2008-இல் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவின் கண்களில் பட்டது.
இது குறித்து டுவிட்டரில் அவர் கருத்து தெரிவிக்கையில் அரசின் நிதி கிடைக்காமல்
பாராலிம்பிக் வீராங்கனை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் ஆகியோர் பொறுப்பேற்று தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விசாரித்து சொல்கிறேன்
இதுகுறித்து விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் கூறுகையில்,
ஜெர்மனியில் வீராங்கனை அவதிப்படுவது குறித்து உண்மை நிலவரங்களை விசாரிக்க என் அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் கூறுவதை வைத்தே இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க முடியும் என்று ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.