தூத்துக்குடியில் ரவுடி குத்திக்கொலை ….!
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே தெற்கு சங்கரபேரியை சேர்ந்த லாரி டிரைவர் அங்குசாமி என்ற ஈஸ்வரன் (46). இவருக்கு தங்கமாரியம்மாள் என்ற மனைவியும் 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். 2012ல் மாரீசன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர். மேலும் ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிப்காட் காவல் நிலையத்தில் அங்குசாமி ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். இதே பகுதியை சேர்ந்த மற்றொரு லாரி டிரைவர் முனியசாமி (48). இவருக்கு 3 மகன்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன் குடிபோதையில் முனியசாமி சங்கரப்பேரியில் உள்ள அங்குசாமியின் தங்கைக்கு சொந்தமான பூட்டிக்கிடக்கும் வீட்டிற்குள் நுழைந்து தூங்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்டது தொடர்பாக அங்குசாமிக்கும், முனியசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அங்குசாமி, முனியசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தெற்குசங்கரப்பேரி – பண்டாரம்பட்டி இடையே ஒரு பழைய மயானத்திற்கு அருகே நேற்று காலை அங்குசாமி குத்தியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் விசாரணையில் முனிசாமி மகன்கள் மாரி, வேல்ராஜ் ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தந்தை தாக்கப்பட்டதற்கு பழிக்கு பழியாக இருவரும் உறவினர்களுடன் சேர்ந்து அங்குசாமியை கொலை செய்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.