நடிகர் ரவிதேஜாவுக்கு போதைப் பொருட்களை வீடு வரை கொண்டுவந்து கொடுத்தது யார் ..?
திருமலை: நடிகர் ரவிதேஜாவுக்கு போதைப் பொருட்களை வீடு வரை கொண்டுவந்து கொடுத்தது யார் என அவரது கார் டிரைவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி கேட்டனர். தெலங்கானாவில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போதை மருந்து விற்பனை செய்ததாக கெல்வின் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் ரவிதேஜா, தருண், நவ்தீப், தனிஷ், நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்நாத், கலை இயக்குனர் சின்னா, ஒளிப்பதிவாளர் சாம்கே நாயுடு உட்பட 12 பேர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அளித்து உத்தரவிடப்பட்டது. இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, இயக்குனர் பூரி ஜெகன்நாத், சின்னா, நவ்தீப், தருண் ஆகியோர் விசாரணைக்கு ஆஜரான நிலையில், பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடிகை சார்மி, நடிகை முமைத்கான் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் நடிகர் ரவிதேஜா ஐதராபாத்தில் உள்ள மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். காலை 9.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை ஒன்பதரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரவிதேஜாவின் கார் டிரைவர் சீனிவாசராவை விசாரணைக்கு ஆஜராகும்படி மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்திருந்தனர். அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு சீனிவாசராவ் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நடிகர் ரவிதேஜாவுக்கு போதைப் பழக்கம் உள்ளதா? போதைப் பொருட்கள் எங்கிருந்து வந்தது, வீடு வரை கொண்டு வந்து கொடுத்தவர்கள் யார், அவர் யாரையெல்லாம் சந்திப்பார், நடிகை முமைத்கானுடன் ரவிதேஜா எங்கெல்லாம் சென்றார்உட்பட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர்.
முதல்வர் பேட்டி: தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘போதைப் பொருள் பயன்படுத்திய நடிகர்கள், நடிகைகள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரையும் பாதிக்கப்பட்டவர்களாகவே இந்த அரசு பார்க்கும். அதை கடத்தியவர்களையே மட்டுமே குற்றவாளிகளாக கருதும். நடிகர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.