கேரளாவில் விபத்தில் உயிரிழந்த தமிழக இளைஞர் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவி
கொல்லம்,ஆக.15-
நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.கடந்த 6- ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது முருகன்விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு கொல்லம், திருவனந்தபுரம் என்று 6 மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் செயற்கை சுவாச கருவிகள் இல்லை என்பது உள்பட பல்வேறு காரணங்களை கூறி முருகனை மருத்துவமனையில் அனுமதிக்காததால் அவர் ஆம்புலன்சிலேயே உயிரிழந்தார்.இத்தகைய மனிதாபிமானமற்ற செயலால் நெல்லை வாலிபர் உயிரிழந்தது பெரும்வேதனையை ஏற்படுத்தியது.இந்நிலையில், கேரள மருத்துவ மனைகளின் செயலுக்காக இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டசபையில், தமிழகத் தொழிலாளி முருகனின் குடும்பத்திடம் பகிரங்க மன்னிப்புகேட்டார். மேலும் முருகனின் குடும்பத்திற்கு உதவிகள் செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லம் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு முருகனின் மனைவி முருகம்மாள் தனது2 குழந்தைகளான கோகுல், ராகுல்ஆகியோருடன் ஞாயிறன்று வரவழைக்கப்பட்டார்.
முருகம்மாள் மிகுந்தசோகத்துடன் கண்ணீர் சிந்தியபடி காணப்பட்டார். அவரது 2 குழந்தைகளும் மொட்டை அடிக்கப்பட்டு இருந்தனர். அதேசமயம் அந்த குழந்தைகளுக்கு தந்தையை இழந்த சோகம் தெரியவில்லை. இது பார்ப்பவர்களை உருக்குவதாக இருந்தது.கட்சியின் கொல்லம் மாவட்டச் செயலாளர் கே.என். பாலகோபால் மற்றும் கட்சி நிர்வாகிகள் முருகனின் குடும்பத்தினரிடம் பரிவுடன் பேசினார்கள். அவரது குழந்தைகளின் படிப்புச் செலவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளும் என்றுஉறுதி அளித்தனர்.மேலும் அரசு சார்பில் செய்யப்படும் உதவிகளை முதல்வர் பினராயி விஜயனிடம் பேசி 2 நாட்களில் முறைப்படி தெரிவிப்பதாக அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.