விவசாயிகள்இரும்பு சங்கிலியால் கை,கால்களை கட்டி போராட்டம்
காவிரி மேலாண்மை, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
சுமார் 41 நாள்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். எனினும் வாக்களித்தபடி முதல்வரும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், டெல்லியில் மீண்டும் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நேற்று முன்தினம் திடீரென பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து விவசாயிகளை போலீசார் தடுத்து, கைது செய்து நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து 2வது நாளான நேற்று காலை முதல் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் துவக்கினார்கள். விவசாயிகள் அனைவரும் கை மற்றும் கால்களை இரும்பு சங்கிலியால் கட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளின் உணர்வு களுக்கு மதிப்பளிக்காமல் அவர்களை நான்காம் தர மக்களை போல் நடத்தி வருகின்றன. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனை அளிக்கின்றது. மேலும் டெல்லி போலீசார் தமிழக விவசாயிகளை இங்கு போராட்டம் நடத்த வேண்டாம் எனக்கூறி தமிழகம் திரும்ப வற்புறுத்தி வருகின்றனர்.
அதனால் எங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும், விரைவில் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் அனைவரும் கை மற்றும் கால்களை இரும்பு சங்கிலியால் கட்டி பூட்டு போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.