கத்தாரில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்க ஆலோசனை…..!

Default Image

கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலருக்கு நிரந்தக் குடியுரிமை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கே.யூ.என்.ஏ தெரிவித்துள்ளது.
வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது வளைகுடா நாடுகளில் நடைமுறையில் இல்லை. இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துவிட்டாலும், சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த மசோதாவின்படி, கத்தார் நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளும் வெளிநாட்டவரின் குழந்தைகள் மற்றும் சிறப்பாகப் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு, கத்தாரில் வசிக்க நிரந்தர அனுமதி வழங்கப்படும்.
இந்தப் புதிய சட்ட மசோதாவின்கீழ், குடியுரிமை பெறத் தகுதி பெற்றவர்களுக்கு உள்துறை அமைச்சகம் சட்ட அனுமதி வழங்கும்.
வளைகுடா நாடுகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களே அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுவது அபூர்வம். சுமார் 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட கத்தாரில், மூன்று லட்சம் பேர் மட்டுமே கத்தார் நாட்டுக் குடிமக்கள் உள்ளனர்.
வெளிநாட்டவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கொடுப்பதற்கு, உள்நாட்டில் எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டால், உள்நாட்டின் கட்டமைப்பு மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
புதிய சட்டத்தின்படி, நிரந்தரக் குடியுரிமை பெறுபவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் சுகாதார வசதிகளுடன், அங்கு சொத்து வாங்கும் உரிமையும் கிடைக்கும்.
வெளிநாட்டினர் அங்கு தொழில் தொடங்க வேண்டுமானால், கத்தாரில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுடன் கூட்டு வைக்க வேண்டியது கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனி மனித வருமானத்தில், உலகிலேயே பெரிய செல்வந்த நாடானா கத்தாரில், 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தங்கள் எழுந்துள்ளன.
தொழிலாளர்களுக்கான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அரசு கூறுகிறது. தீவிரவாத நடவடிக்கைகளை கத்தார் ஊக்குவிப்பதாக கத்தார் மீது குற்றம்சாட்டிய சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் ஆகிய நாடுகள், ஜூன் ஐந்தாம் தேதி முதல் பல்வேறு தடைகளை கத்தார் மீது விதித்தன.
அரபு நாடுகளில் வசிக்கும் கத்தார் குடிமக்கள் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும், தங்கள் குடிமக்கள் கத்தாரில் இருந்து வெளியேறுமாறும் உத்தரவிட்டதோடு, கத்தாருடனான போக்குவரத்தையும் முறித்துக் கொண்டன.
‘கஃபாலா’ என்றழைக்கப்படும் பணி வழங்கும் அமைப்பு முறையின்படி, கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணி மாறுதல் செய்ய வேண்டும் என்றாலும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், முதலாளியிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
உள்துறை அமைச்சகம், நிரந்தரக் குடியுரிமை கோரிக்கைகளுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்க ஒரு குழுவை நியமிக்கும் என்று கே.யூ.என்.ஏ கூறுகிறது.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்