டி.டி.வி. தினகரனின் உருவபொம்மை, படத்தை எரித்து கடலூர் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர் எம்.சி. சம்பத் (கிழக்கு), அருண்மொழிதேவன் எம்.பி. (மேற்கு) ஆகியோர் கட்சி பதவியில் இருந்து நீக்கிய டி.டி.வி. தினகரன் உருவபொம்மை, படத்தை அ.தி.மு.க.வினர் எரித்து கடலூர் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வில் (அம்மா) பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளின் பதவிகளை துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பறித்தும், புதிய நிர்வாகிகளை அறிவித்தும் வருகிறார்.
இந்த நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் எம்.சி.சம்பத்தை நீக்கி டி.டி.வி. தினகரன் அறிவித்தார். அதற்கு பதிலாக கலைச்செல்வன் எம்.எல்.ஏ.வை மாவட்டச் செயலாளராக நியமித்துள்ளார்.
இதே போல் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அருண்மொழிதேவன் எம்.பி.யை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக காட்டுமன்னார்கோவில் கே.எஸ்.கே. பாலமுருகன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவற்றைக் கண்டித்து கடலூர் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் அண்ணா பாலம் அருகில் அ.தி.மு.க. (அம்மா) நகர செயலாளர் குமரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் டி.டி.வி. தினகரன் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவருடைய உருவ படத்தை கிழித்தும் கண்டன முழக்கமிட்டனர்.
பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு, அண்ணாகிராம ஒன்றியம் ராஜாபாளையம், காடாம்புலியூர் முத்தாண்டிக்குப்பம், தொரப்பாடி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆகிய இடங்களில் அ.தி.மு.க.வினர் டி.டி.வி. தினகரனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டி.டி.வி. தினகரன் உருவபொம்மை மற்றும் உருவபடத்தை எரித்தனர்.
கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.பி.யை பதவி நீக்கம் செய்த அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் தினகரனை கண்டித்து, திட்டக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தினகரனின் உருவப்படத்தின் மீது கட்சியினர் தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.