உள்நாட்டு பிரச்சனைகளை திசைதிருப்பவே ஒரு போலியான எதிரியை இந்திய அரசு உருவாக்குகிறது…!

Default Image
இந்தியாவிற்கு உள்நாட்டுப் பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்ப கற்பனையாகவாவது ஒரு எதிரி வேண்டும் என சீன ஆய்வாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வெஸ்ட் நார்மல் பல்கலைக்கழகத்தில் இந்தியா குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர் ஷிங்சன். “இவர் ஸ்டேட்ரன் குலோபல் டைம்ஸ் பத்திரிக்கையில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை குறித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் அவர், இந்தியாவிற்கு பொதுவாக ஒரு எதிரி வேண்டும், அந்த எதிரி ஒரு கற்பனையாகவாவது இருக்க வேண்டும். பல்வேறு மதங்கள், மொழிகள், பல நாட்டினர் என இத்தனை முரண்பாடுகளும் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக் கூடியவை. இந்த முரண்பாடுகளிலிருந்து விலக்கி, மக்களை திசை திருப்ப இந்தியாவிற்கு வெளியில் இருந்து ஒரு எதிரி தேவை” என்று கூறியுள்ளார்.
“இந்தியாவின் முன்னாள் பரம எதிரியான பாகிஸ்தான் இதற்கு போதுமானதாக இல்லை. ஏனென்றால் இந்தியா சக்தி வாய்ந்த நாடாக வளர்ந்துவிட்டது. இந்தியா, சீனா இடையிலான பெரிய அளவிலான எல்லைகள் சர்ச்சைக்குரியவையாக உள்ளன. மேலும் இரு நாடுகளிடையே 1962-ம் ஆண்டு நடந்த போர் உள்ளிட்டவை, இயற்கையாகவே பாகிஸ்தானின் பரம எதிரி அந்தஸ்தை சீனா அடைய போதுமானதாக உள்ளது” என்று கூறியுள்ள ஷிங்சன், “இந்தியா டோக்லாம் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியா படைகளை திரும்பப் பெறுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையாகவே சீனா இந்தியாவை மிரட்டுகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “சிக்கிம் மாநிலத்தின் சிலிகுரி என்ற பகுதி வடகிழக்கு மாநிலங்களை, இந்தியாவுடன் இணைக்கும் ஒரு ’கோழிக் கழுத்து’ போன்று வரைபடத்தில் தெரிகிறது. ராணுவம் மற்றும் புவியியல் பார்வையில் இந்தப் பகுதியை கழுத்து என்று கூறுவார்கள். இந்தப் பகுதி வெறும் 27 கிலோ மீட்டர் அகலம் கொண்டது. சிலிகுரி பகுதியை சீன ராணுவம் கைப்பற்றினால், இந்திய ராணுவம் தனது வட கிழக்கு மாநிலங்களை அடைய முடியாது. இதுகுறித்து இந்தியா நன்கு உணர்ந்தே உள்ளது. இழுபறியில் உள்ள டோக்லாம் எல்லைப்பகுதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், அப்பகுதியை சீனா வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சீனாவை தொடர்ந்து எதிரி நாடாக சித்தரிப்பதன் மூலம், மக்களின் உணர்வுகளை தூண்டி இந்திய அரசியல்வாதிகள் அதிக ஓட்டுகள் பெறுகின்றனர். ராணுவ அதிகாரிகள் பெரும் நிதி பெறுகின்றனர், ஊடகங்கள் பணம் சம்பாதிக்கின்றன. மேதைகள் பிரபலமாகின்றனர்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார் ஷிங்சன். “சீனாவை இந்தியா தொடர்ந்து எதிரி நாடாக சித்தரிக்கிறது. இது அளவுக்கு மீறும் போது, சீனா நிஜமாகவே இந்தியாவின் எதிரி நாடாக மாற வாய்ப்புள்ளது” என்று எச்சரிக்கவும் செய்கிறார் அவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்