கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ்….!
புரோ கபடி லீக் போட்டியின் 117-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது.
புரோ கபடி லீக் போட்டியின் 117-வது ஆட்டம் தமிழ் தலைவாஸ் – யு மும்பா அணி மோதின. இந்த ஆட்டத்தில் மூன்று நிமிடங்களில் மூன்று ரைடு புள்ளிகளை அஜய் தாக்குர் கைப்பற்ற, நான்கு நிமிடங்களில் 5-1 என முன்னிலை பெற்றது தமிழ் தலைவாஸ்.
ஆறாவது நிமிடத்தில் யு மும்பா வீரர் தர்ஷன் கடியான் சூப்பர் ரைடு மூலம் புள்ளிகளை அள்ள, 6-7 என்ற நிலையை எட்டியது அந்த அணி.
இந்த நிலையில், அந்த அணி தொடர்ச்சியாக புள்ளிகளை கைப்பற்றி 10-7 என முன்னிலை பெற்றது. 12-வது நிமிடத்தில் ஆல் ஔட் ஆன தமிழ் தலைவாஸ், 8-14 என பின்தங்கியது.
பின்னர் மீண்ட தமிழ் தலைவாஸ், முதல் பாதி ஆட்டநேர முடிவில் 15-18 என்ற கணக்கை எட்டியது. பின்னர் தொடங்கிய ஆட்டத்திலும் யு மும்பா அதிரடி காட்ட 25-19 என அந்த அணி முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில், தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர் தனது ரைடுகளால் புள்ளிகளை குவித்தார். இதனால் யு மும்பா ஆல் ஔட்டாக தமிழ் தலைவாஸ் 30-29 என முன்னிலை பெற்றது.
பின்னர் இரு அணிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றபோதிலும், இறுதியாக தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
இந்த ஆட்டத்தில் 25 முயற்சிகளில் 15 ரைடு புள்ளிகளை கைப்பற்றிய தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர், புரோ கபடியில் 500 ரைடு புள்ளிகள் பெற்ற வீரர் என்ற மைல் கல்லை எட்டினார். அந்த அணியின் தடுப்பாட்டக்காரர் தர்ஷன் 6 முயற்சிகளில் 3 டேக்கிள் புள்ளிகள் பெற்றார்.
யு மும்பா தரப்பில் ரைடர் ஜாதவ் 15 முயற்சிகளில் 7 ரைடு புள்ளிகளும், தடுப்பாட்டக்காரர் சுரிந்தர் சிங் 9 முயற்சிகளில் 6 டேக்கிள் புள்ளிகளும் பெற்றனர்.
இந்த ஆட்டத்தின் மூலம் 5-வது வெற்றியை பதிவு செய்துள்ள தமிழ் தலைவாஸ் அணி, ‘பி’ பிரிவு புள்ளிகள் பட்டியலில் 40 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
யு மும்பா அணி ‘ஏ’ பிரிவு புள்ளிகள் பட்டியலில் 56 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.