இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா அணி ..!
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தை பக்குவமாக பயன்படுத்தி இருவரும் ரன்கள் சேகரித்தனர்.இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது.
பின்னர் இறங்கிய இந்திய அணியினர் ரஹானேவும், ரோகித் சர்மாவும் அருமையான தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர்.ஆனால் அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி சற்றே தடுமாறி விக்கெட் இழந்தார்.
இதன் பிறகு ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் , மனிஷ் பாண்டே ஆகியோரின் போராட்டம் தோல்வி வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. கடைசிகட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட டோனி ஏமாற்றம் அளித்தார்.
50 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்திய அணியால் 8 விக்கெட்டுக்கு 313 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.இத்தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.