எடப்பாடி அரசின் ‘மெஜாரிட்டி’ விவகாரத்தில் தலையிட முடியாது.. கைவிரித்தார் ஆளுநர்!
சென்னை: முதல்வர் எடப்பாடி அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரிக்கை விடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும் அதிமுகவின் உள்கட்சி பூசல் நிலவி வருவதால் இதில் சட்டபடி தலையிட முடியாது என்று ஆளுநர் தெரிவித்து விட்டார். முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மேலும் சில எம்எல்ஏக்கள் தினகரன் அணிக்கு மாறவும் வாய்ப்புள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.
ஆளுநரிடம் கடிதம்
சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடியார் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளன. இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று எதிர்க்கட்சிகளான திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்து பேசினர்.
பெரும்பான்மையை நிரூபிக்க கோரி
அப்போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை.
பாஜக பஞ்சாயத்தே காரணம்
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததற்கு பாஜகவின் பஞ்சாயத்தே காரணம். ஆளுநர் தாமதிக்காமல் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆளுநர் கைவிட்டு விட்டார்
அப்போது பேசிய திருமாவளவன், ஒரே கட்சியில் இருகுழுக்களாக பிரிந்ததால் இந்த சூழலில் சட்டப்படி தலையிட முடியாது என்றும், அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபித்து விட்டது என்று எங்களால் முடிவெடுக்க முடியவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்ததாக திருமாவளவன் தெரிவித்தார்.