சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடத்துவதற்கான ஒப்பந்தம் ரத்து; மு.க ஸ்டாலின் கண்டனம்
2019 ஆம் ஆண்டு வரை சென்னையில் டென்னிஸ் போட்டிகளை நடத்த ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்வது தொடர்பான தகவல் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் உறுதி செய்துள்ளது.
கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த சென்னை டென்னிஸ் ஓபன் போட்டிகள், துவக்கத்தில் கோல்டு ஃபிளேக் ஓபன் என அறியப்பட்டது. பின்னர் டாடா குழுமத்தின் ஆதரவு பெற்று டாடா ஓபன் என அழைக்கப்பட்டது.
தொடர்ந்து வர்த்தக மாற்றத்தின் காரணமாக, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இப்போட்டிகள் ஏர்செல் சென்னை ஓபனாக மாற்றமடைந்தது.
தற்போது ஏர்செல் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைவதால், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், இந்த விளையாட்டுப் போட்டியை பூனாவுக்கு மாற்றி டென்னிஸ் ரசிகர்களையும், தமிழக டென்னிஸ் வீரர்களையும் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்குவது ஐ.எம்.ஜி. நிறுவனத்திற்கு அழகல்ல என்றும், வர்த்தக நலன் என்றெல்லாம் கூறி மாற்ற நினைக்கும் இந்த முயற்சியை இதுவரை கண்டிக்காமல், தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் மூலமாக தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசும் மவுனமாக இருப்பது கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளால், சென்னையில் உள்ள டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வரும் ரசிகர்களால் தமிழகத்திற்கு குறிப்பாக, சென்னை மாநகரத்திற்கு பெருமை கிடைத்து வந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், இந்தப் போட்டி அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது வேதனையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு 21 ஆண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியை தொடர்ந்து நடத்துவதற்கு மாநில அரசின் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதால், ஏ.டி.பி. டென்னிஸ் ஓப்பன் போட்டியை தொடர்ந்து சென்னையில் நடத்திட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்