இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தடகளவீரர்!

Default Image
ஏதாவது ஒரு விளையாட்டில் நம்நாடு ஒரு பதக்கத்தையாவது வென்று விடாதா என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் அனைவரிடமும் இன்று வரை தொக்கி நிற்கிறது. திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் நாம் பின்தங்கியே இருக்கிறோம் என்பதே முக்கியக் காரணம்.
எனினும், அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தன்னார்வலர்களால் நடத்தப்படும் இளைஞர் விளையாட்டுக்கழகங்களால் தயாரிக்கப்படும் வீரர்கள் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் ஒரு சில பதக்ககங்களைப் பெற்று இந்தியாவை பதக்கப்பட்டியலில் தக்கவைத்து வருகின்றனர் என்றால் அது மிகையில்லை.
அந்த வகையில் கடந்த 2006 -இல் கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி வெள்ளிப்பதக்கம் வென்று ஒட்டு மொத்த இந்தியாவையும் புதுக்கோட்டையை நோக்கி திரும்ப வைத்தார்.
அதைத்தொடர்ந்து 11 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவில் ஒடிஸவில் நடைபெற்றுவரும் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் 5 ஆயிரம் மீட்டர், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ள புதுக்கோட்டையைச் சார்ந்த தடகள வீரர் கோ. லெட்சுமணனின் சாதனையால் நாட்டு மக்களின் பார்வை மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
இவரது சாதனைக்கு அடித்தளமிட்ட புதுக்கோட்டை கவிநாடு இளையோர் விளையாட்டுக்கழகத்தின் வரலாற்றை திரும்பிப்பார்ப்போம்.
ஆர்வமுள்ள கிராமப்புற விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதில் தன்னார்வம் கொண்ட புதுகையைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் எஸ். லோகநாதன், திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த விளையாட்டு ஆர்வலர் பி.வி.ஆர். சேகரனுடன் இணைந்து சர்வதேச அளவில் தடகளப்போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று பதக்கங்கள் வென்று, தமிழகத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதை அடிப்படை லட்சியமாக் கொண்டு புதுக்கோட்டை கவிநாடு யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற அமைப்பை 2002 -இல் தொடங்கப்பட்டது.
மிகவும் பின்தங்கிய மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தை, கடந்த 2006 -இல் கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வீராங்கனை சாந்தி இந்த விளையாட்டுக்கழகத்தில் பயிற்சி பெற்றவர். இவரைத் தொடர்ந்து, வீராங்கனைகள் ரம்யா, எம். கவிதா, வி.எம். கவிதா ஆகியோர் தேசிய அளவிலும், எல். சூர்யா(சீனா, ஜப்பான்), விமலா ஆகியோர் சர்வதேச அளவிலும் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளனர். இதேபோன்று, தற்போது தங்கம் வென்றுள்ள கோ. லெட்சுமணன் முகமதுநசீர், பொற்பனையான், முருகானந்தம், லோகநாதன், சக்திவேல், பன்னீர்செல்வம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பல்கலைக்கழக, மண்டல, மாநிலங்கள் மற்றும் தேசிய அளவிலான ஓட்டப்போட்டிகளில் பல்வேறு நிலைகளில் இதுவரை சுமார் 2,000 பதக்கங்கள்
வென்றுள்ளனர்.
அரசின் எவ்வித உதவியுமின்றி தனி ஒரு விளையாட்டுக்கழகம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் வீரர்களை தயார் செய்துவருவதைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த விளையாட்டு சங்கத்துக்கு கடந்த 18.7.2007 -இல் அங்கீகாரம் அளித்துள்ளது. இங்கு ஆரம்ப காலத்தில் 30 பேர் பயிற்சி பெற்றனர்.
சுற்று வட்டாரத்தில் சுமார் 32 கிராமங்களைச் சேர்ந்த ஆடவர், மகளிர் உள்பட 125 பேர் பயிற்சி பெறுகின்றனர். பள்ளி வார விடுமுறை நாள்களில் மூன்று நேர உணவுடன் கூடிய பயிற்சியும், கோடை கால விடுமுறையில் 30 நாள்களும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை, சீனா, ஜப்பான், கத்தார் ஆகிய நாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றுள்ளனர்.
நிகழாண்டில் ஆசிய தடகளப்போட்டியில் 2 தங்கப்பதக்கம் வென்றுள்ள புதுகையைச் சேர்ந்த தடகளவீரர் கோ. லெட்சுமணன் குறித்து அவரது தொடக்க காலப்
பயிற்சியாளர் எஸ். லோகநாதன் கூறியது:
“கடந்த 2002 -இல் குடும்பச்சூழல் காரணமாக பல்வேறு வேலைகளைச் செய்து வந்த லெட்சுமணன், இங்கு வீரர்கள் பயிற்சி பெறுவதைப் பார்த்து தானும் பயிற்சி பெறலாமா எனக்கேட்டபோது அவரை அனுமதித்தோம். இதையடுத்து லெட்சுமணனின் தாயார் ஜெயலட்சுமி இவன் என் மகனில்லை, உங்கள் பிள்ளை அவனை நல்ல நிலைக்குக் கொண்டுவருவது உங்கள் பொறுப்பு எனக்கூறிவிட்டுச்சென்றார். பயிற்சியில் லெட்சுமணனின் திறமை தனியாகத்தெரிந்தது.
இதையடுத்து 2 ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற நெடுந்தூரப்போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றார். 2006-07 இல் சென்னையில் நடந்த மாராத்தான் போட்டியில் 6 -ஆவது இடம் வென்றார். தொடர்ந்து ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற மாநிலப் போட்டியில் பங்கேற்ற லெட்சுமணன் முன்பிருந்த சாதனையை முறியடித்தார்.
இதையடுத்து அவருக்கு ராணுவத்தில் பணி அமர்த்தப்பட்டார். அன்று முதல் அவரது திறமைகளை நன்றாக மெருகூட்டிக்கொண்டார். இன்று ஆசியப் போட்டியில் நெடுந்தூரப் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீரர் என்ற சாதனை நிகழ்வை எனது பிறவிப்பயனாகவே உணர்கிறேன். எனது வாழ்நாள் கனவை நனவாக்கிய லெட்சுமணன் இன்னும் கடுமையாக உழைத்து உலகப்போட்டியிலும், ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கம் வெல்வதுதான் தனது லட்சியம் எனக்கூறியுள்ளார். அதை உறுதியாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
இது குறித்து, புதுகை அருகே சொக்கூரணி கிராமத்தில் வசித்துவரும் அவரது தாயார் கோ. ஜெயலட்சுமி கூறியது:
“அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த கணவர் கோவிந்தனுடன் திருமணம். 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் பிறந்தனர். இதில் கடைக்குட்டியாகப் பிறந்த ஆண், பெண் இரட்டைக்குழந்தைகளில் ஆணுக்கு லெட்சுமணன் என்ற பெயரையும் அவருடன் பிறந்த பெண் குழந்தைக்கு ராமேஸ்வரி என்ற பெயரையும் சூட்டினேன்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்குப் பேருந்தை ஓட்டிச்சென்ற போது விழுப்புரம் அருகே நேரிட்ட விபத்தில் கணவரை இழந்தேன். அப்போது, லெட்சுமணனுக்கு 5 வயது. குடும்பம் நிலைகுலைந்து போனது. கூலி வேலை செய்து குழந்தைகளை ஓரளவுக்குப் படிக்க வைத்தேன். லெட்சுமணன் 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு பல்வேறு வேலைகளைப்பார்த்து வந்த நிலையில், கவிநாடு இளையோர் விளையாட்டுக் கழகத்தில் பயிற்சிக்காகச் சேர்ந்தான்.
பயிற்சியின்போது, இரவு, பகல் என்ற கணக்கே கிடையாது. திடீரென இரவு 2 மணிக்கு சைக்கிளில் கிளம்பிச்செல்வான். பயிற்சிக்கு லோகநாதன், பி.வி.ஆர். சேகரன் ஆகியோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இந்த நிலைக்கு உயர அவர்கள்தான் காரணம். கடந்த சில நாட்களாக எங்கள் வீட்டைத்தேடி யார் யாரோ நேரில் வந்து பையனைப்பற்றி விசாரித்துச்செல்கின்றனர். அவனைப் பெற்ற தாய் என்பதற்காக பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.
source from : dina mani
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்