நம் உடலுக்கு தண்ணீரின் எவ்வளவு தேவை ?
மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.
நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம்.
உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும், ரத்தத்தின் அடிப்படைக்கும், மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர், கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது.
நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவேதான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் அவர்களின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது. அதுவே 65- 70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகிறது. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும்.