அனிதா மரணம் : ‘கபாலி’-பா.ரஞ்சித் கோபம்

Default Image
இந்துத்துவா ஒழியாத வரை சாதி ஒழியாது. சாதி ஒழியாத வரை சமூக நீதி நிலைக்காது என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நீலம் அறக்கட்டளை இணைந்து சென்னை லயோலா கல்லூரியில் நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சுசீந்திரன், கரு.பழனியப்பன், ‘உறியடி’ விஜயகுமார், மகிழ்திருமேனி, வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், மோகன் ராஜா, சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ், சீனுராமசாமி, மிஷ்கின், ராஜுமுருகன் மற்றும் நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், கலையரசன், தினேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது:
இந்துத்துவா ஒழியாத வரை சாதி ஒழியாது. சாதி ஒழியாத வரை சமூக நீதி நிலைக்காது. இன்னும் பல அனிதாக்களை நாம் இழக்க நேரிடும். இந்த சாதிய சமூகத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி படித்து வெற்றி பெற்ற ரோகித் வெமூலா, முத்துகிருஷ்ணன் இப்போது அனிதா என மெரிட்டில் தேர்வானவர்களே மரணத்திற்கு உள்ளாகிறார்கள்.. இந்த மரணம் ஒரு வித அச்சத்தைத் தருகிறது.
அனிதாவின் இழப்பை ஒரு தமிழ் குழந்தையின் இழப்பாகவே நாம் பார்க்கவேண்டும், உணர்ச்சிவயப்பட்டு எந்த பலனும் நமக்கு கிடைக்கப்போவதில்லை. இந்த அரசு என்ன செய்கிறது முதலில் நம் உணவை சாப்பிடக் கூடாது என  சொன்னார்கள், ரேஷன் கார்டை பிடுங்கிவிட்டார்கள். இப்போ நீட் கொண்டுவந்து எளியவர்களின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார்கள்.
பண்பாட்டு ரீதியில் நாம் ஒன்று சேரவேயில்லை, இன்னும் ஒரு ஊரில் கோயில் எதற்கு இருக்கிறது? கோயிலுக்கு முன்னால் யார் வசிக்கிறார்கள்? கோயிலுக்கு பின்னால் யார் வசிக்கிறார்கள்? கோயில் நிலங்கள் யார் கையில் இருக்கிறது, எதைக் குறித்தும் நாம் தெரிந்துகொள்வதில்லை.
அனிதாவை தலித் குழந்தையாக பார்க்காமல் ஒரு தமிழ் குழந்தையாக பார்க்கவேண்டும். எதற்கெடுத்தாலும் கோட்டாவில் படித்து வந்துவிடுகிறார்கள் என்கிறார்கள், அனிதாவின் மார்க்குகளை பாருங்கள். ஒரு தலைமுறையின் எதிர்காலமே சிதைக்கப்பட்டுவிட்டது. இந்த மரணங்கள் மேலும் நிகழாமல் தடுக்க நீட்டை ஒழித்தே ஆக வேண்டும். நாம் ஒன்றாகவேண்டும்.
இவ்வாறு இயக்குநர் பா.ரஞ்சித் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவி அனிதாவின் படத்திற்கு மாணவர்கள், பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்