தினகரன், திவாகரன் சேர்ந்துட்டாங்க… இனி ஓபிஎஸ் தனி மரம்- சம்பத் ஆவேசம்!
சென்னை : அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், பொதுச்செயலாளர் சசிகலாவின் தம்பி திவாகரனும் இணைந்திருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணியில் இருந்து அனைவரும் சென்று விடுவார்கள். ஓபிஎஸ் தனிமரமாவார் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் அண்ணன் மனைவி சந்தானலட்சமி நேற்று உயிரிழந்தார். இதற்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா இறந்ததையடுத்து கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் டிடிவி. தினகரனும், சசிகலாவின் தம்பி திவாகரனும் எதிரும் புதிருமாக செயல்படத் தொடங்கினர்.
சசிகலா குடும்ப உறுப்பினர்களின் மோதலால் அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும் என்றெல்லாம் கணிக்கப்பட்டது. இந்நிலையில் துக்க வீட்டில் தினகரனும், திவாகரனும் முதற்கட்டமாக கைகோர்த்துள்ளனர்.
நீர் அடித்து நீர் விலகிவிடாது, தினகரன் என்னுடைய அக்காள் மகன் என்று நெஞ்சை தொட்டு பேசியுள்ளார் திவாகரன். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக அம்மா அணியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தினகரனும், திவாகரனும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
அதிமுகவின் இரண்டு அணிகளை இணைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆறுக்குட்டி போய்விட்டார், மாஃபா பாண்டியராஜனும் இரண்டு நாட்களில் பிரிந்து போய்விடுவார். இதனால் அணிகளை இணைப்பதற்கான தேவையே எழாது. பன்னீர்செல்வம் தனிமரமாக நிற்பார் அதை யாராலும் தடுக்க முடியாது.
ஆகஸ்ட் 5ம் தேதியுடன் இரு அணிகள் இணைப்புக்காக விதிக்கப்பட்ட கெடு முடிகிறது. அதன்பிறகு தினகரன் மக்களை சந்திக்கிறார், ஒரே பொதுக்கூட்டத்தில் எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.
ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் கைக்கூலி, அவர்கள் சொல்லச்சொல்வதை திரும்பச் சொல்வார் அதை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டோம். அவர் தவிர்த்து மற்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு அதிமுக ஒரே அணியாக செயல்படும்.